Friday, 7th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் தடை செய்யப்பட்ட பகுதியை தளர்த்தக்கோரி முஸ்லிம் பெண்கள் திடீர் மறியல்

மே 10, 2020 10:28

திருச்சி: ஊரடங்கு உத்தரவால் தடை செய்யப்பட்ட பகுதியை தளர்த்தக்கோரி திருச்சியில் முஸ்லிம் பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு சவுக்கு கம்புகள் கட்டி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் யாரும் வெளியே அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாத நிலை உள்ளது.

அதேவேளையில் வெளியில் இருந்தும் யாரும் உள்ளே செல்லவும் அனுமதி இல்லை. அங்கு வசிப்பவர்களுக்கு தேவையான பொருட்கள் அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் 15 இடங்கள் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தது. பலர் குணமாகி வீடு திரும்பியதால் படிப்படியாக தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் மதுரை ரோட்டில் உள்ள ஜலால்குதிரி தெருவில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் வசித்த 30 வயது கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரது ரத்த மாதிரி சோதனை முடிவு அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஜலால்குதிரி தெரு பகுதிக்கு செல்லக்கூடிய 3 பாதைகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து கடந்த 7-ந் தேதி சவுக்கு கம்புகள் கட்டப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டது. ஜலால்குதிரி தெரு கிழக்கு பகுதியில் மட்டும் ஒருவர் சென்று வரும் வகையில் வழி உள்ளது.

இந்த நிலையில் அவசர வேலையாக வெளியே செல்ல முடியாமல் தவித்ததால் 3 இடங்களில் ஏற்படுத்தப்பட்ட தடையில் ஏதாவது ஒன்றை தளர்த்திட வேண்டும் என்று கோரி அப்பகுதி முஸ்லிம் பெண்கள் ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே சத்திரம் செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. சம்பவ இடத்துக்கு போலீஸ் உதவி கமிஷனர்கள் ராமச்சந்திரன் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார், திருச்சி கிழக்கு தாசில்தார் மோகன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவசர தேவைஎன்றால் வழி ஏற்படுத்தி கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்