Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நான் போட்ட வழக்கில்தான் டாஸ்மாக் கடைகள் மூடல்; மக்கள் நீதி மய்யம் கட்சி அல்ல: வக்கீல் ராஜேஷ் விளக்கம்

மே 09, 2020 02:40

சென்னை: தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது. வக்கீல் ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில்தான் இதுசம்பந்தமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. மே 7ம் தேதி முதல் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்டோர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்தது. அதன்படி ஆன்-லைன்  மூலம் பணம் செலுத்தி அது தொடர்பாக விவரங்களை டாஸ்மாக்கில் கொடுத்தால், 750 மிலி கொண்ட 2 பாட்டில் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பணம் செலுத்தினால் 750 மிலி கொண்ட ஒரு மது பாட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். டிஜிட்டல் பில் வழங்க வேண்டும். அதில் வாங்கியவரின் பெயர், ஆதார் எண் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். மதுபாட்டில் பெற்றதில் இருந்து 3 நாட்கள் கழித்து தான் அடுத்தது மது வாங்க முடியும். பார்கள் செயல்படாது. கடை அருகே குடிக்க அனுமதியில்லை.

இதில் குழறுபடி நடந்தாலோ, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்றாலோ டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் நீதிமன்ற விதித்த நிபந்தனைகளை பின்பற்றி டாஸ்மாக் கடை திறக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கோர்ட் விதித்த எந்த நிபந்தனைகளையும் அரசு செயல்படுத்தவில்லை. தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் மதுபானக் கடைகள் செயல்படுகிறது. அதனால், ஆன்-லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் இந்த வழக்கில் இணைப்பு மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நேற்றுமுன்தினம் விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா, சத்தியநாராயணா அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை அரசு செயல்படுத்தவில்லை என கூறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு முடியும்வரை மூடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழக்கில் வரும் 14ம் தேதி தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வழக்கு குறித்து வக்கீல் ராஜேஷ் தெரிவித்ததாவது:

டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு போட்டிருந்தனர். இதை எதிர்த்து நான் ஒரு பொதுநல வழக்கு போட்டிருந்தேன். அதேபோல, இன்னும் 3 பேர் வழக்கு போட்டிருந்தனர். 4 பொதுநல வழக்குகளும் ஹைகோர்ட்டில் பட்டியலிடப்பட்டு வந்தது. எங்கள் எல்லாருடைய வாதங்களை கேட்ட நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட இயலாது என்று சொல்லி சில விதிமுறைகளை சொல்லியது. ஒரு நபருக்கு 750 மிலி கொண்ட ஒரே ஒரு பாட்டில்தான், ஆன்-லைனில் புக் செய்தால் 2 பாட்டில் பெற்று கொள்ளலாம். சமூக விலகல் கடைப்பிடித்து 6 அடி தூரம் நிக்கணும். அதேமாதிரி டாஸ்மாக்கில் கண்டிப்பாக பில் போடணும். அதில் ஆதார் எண், முகவரி போன்றவை டிஜிட்டல் பில்லில் சொல்லப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு அடுத்தநாளே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

ஆனால், தமிழகம் முழுவதுமே மிகப்பெரிய கலவர சூழல் நிலவியது. மக்கள் முட்டி மோதிக் கொண்டனர். ஒரு இடங்களில்கூட அவர்கள் ரசீது எதுவுமே தரவில்லை. அதனால் நான் அடுத்த நாளே, நாங்கள் ஒரு மனு தாக்கல் செய்தோம். அதில், உயர்நீதிமன்றம் கொடுத்த எந்த உத்தரவும் மதிக்கவில்லை. அத்தனையும் காற்றில் பறந்துவிட்டது என்று மனு போட்டிருந்தோம். இதைத்தான் அவசர வழக்காக நேற்றுமுன்தினம் எடுத்துக் கொண்டது.

அப்போது உரிய ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பித்தோம். இதன் அடிப்படையில் தான் கடைகளை திறக்ககூடாது. ஆன்லைனில் வேண்டுமானால் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம் என உத்தரவிட்டனர். இதற்கு நடுவில்தான் கமல்ஹாசன் வழக்கு வந்தது. அவர் 6ம் தேதியே போட்டிருக்க வேண்டும். ஆனால் 7ம் தேதி ஒரு ரிட் மனு போடுகிறார். அந்த மனு உட்பட பிற மனுக்கள் எல்லாம் சேர்ந்து 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாங்க போட்ட வழக்கில்தான் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வக்கீல் ராஜேஷ் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்