Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்பவர்களை தடுக்க சுங்க சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

மே 04, 2020 09:19

சென்னை: கொரோனா பீதியால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்பவர்களை தடுக்க அனைத்து சுங்க சாவடியிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால் சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு படை எடுத்து வருகிறார்கள்.

சென்னையில் அனைத்து பகுதிகளிலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பலர் கொரோனா பரபரப்பு தொடங்கியதும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

பெரும்பாலானோர் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு முடிந்தவுடன் செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதன் பிறகு ஊரடங்கு 2 முறை நீட்டிக்கப்பட்டு விட்டது. 3-வது முறையாக நேற்று 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தென்மாவட்டத்தினர் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.

நேற்றுமுன்தினம் ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் தாம்பரம், செங்கல்பட்டு வழியாகவும், கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் மோட்டார் சைக்கிள்-கார்களில் பயணமானார்கள்.

இதனால் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுக்க தொடங்கின. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று கார்- மோட்டார் சைக்கிள்களில் வந்த நூற்றுக்கணக்கானோரை திருப்பி அனுப்பினர்.

இதேபோன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றவர்களும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லை வரையில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரமாகி உள்ளது. சுங்கச்சாவடிகளில் சோதனை அதிகமாக இருப்பதால் பலர் ஊர்களுக்குள் புகுந்துசெல்ல தொடங்கி உள்ளனர். இதன் காரணமாகவே அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையை போன்று திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் வசிப்பவர்களும் வெளிமாவட்டங்களுக்கு செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து அந்த மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சென்னையில் இருந்து வருபவர்களால் இந்த 3 மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக உள்ளது.

இதைத் தொடர்ந்து 3 மாவட்ட எல்லைகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி சோதனைகளையும் தாண்டியாராவது மாவட்டத்துக்குள் நுழைந்து விட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்