Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்திற்கு வெளிநாட்டு தொழிற்சாலைகளை ஈர்க்க சிறப்பு குழு: முதல்வர் உத்தரவு

ஏப்ரல் 30, 2020 10:36

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: உலக பொருளாதாரத்தில் கொரோனா நோய் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தி செயல்பாடுகளை பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் அதிக முதலீடு செய்துள்ள ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்திட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இச்சூழலில் தமிழகத்தில் ஏற்கனவே அதிக முதலீடுகளை செய்துள்ள நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர்கள் பிற நாடுகளில் இருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கு ஈர்த்து, தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் பணிகளை முடுக்கிவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையில் ''முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு'' ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவில், ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா நாடுகளை சேர்ந்த தொழில் கூட்டமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழகத்தில் உள்ள ஜப்பானிய தொழில் பூங்காக்களின் பிரதிநிதிகள், தமிழக அரசின் நிதி, பெருந்தொழில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ஆகிய துறைகளின் செயலாளர்கள், தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், வணிகவரித்துறை ஆணையர் ஆகியோர் இடம்பெறுவர்.

இடம்பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களை கண்டறிதல் அவர்களை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்கு வழங்க வேண்டிய விரைவான ஒற்றைசாளர அனுமதிக்கான வழிமுறைகள், சிறப்பு சலுகைகள் மற்றும் அவர்களை ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்புக்குழு மேற்கொள்ளும். இந்த சிறப்புக்குழு தனது முதல்கட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் முதல்வரிடம் வழங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்