Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பில் மாநிலங்களில் அலட்சியம்: மத்திய குழுவினர் வேதனை

ஏப்ரல் 30, 2020 06:39

'அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில், வைரஸ் பரவலைத் தடுக்கும் நடைமுறைகள், முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால், சுகாதாரத் துறையினருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது' என, மத்தியக் குழுவினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய, மத்தியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நோய்த் தடுப்பு மையம், எய்ம்ஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உட்பட, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய, ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தக் குழுக்கள், சமீபத்தில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் ஆய்வு செய்தன.

ஆய்வு குறித்து, இந்தக் குழுக்களைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: 'மாதிரிகள் சேகரிப்பது, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில், வைரஸ் தடுப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

அதனால், வைரஸ் பரவல் அதிகரிக்கும்.அதேபோல், சேகரிக்கப்படும் மாதிரிகள், பரிசோதனை மையத்தை அடையும் வரை, ஒரே தட்ப வெப்பநிலையில் இருக்க வேண்டும். அதற்காக, சிறப்பு பெட்டியில் வைத்து பராமரிக்க வேண்டும். அவ்வாறு வைக்காவிட்டால், பரிசோதனை முடிவுகளில் வேறுபாடு ஏற்படும்.

இந்த விஷயத்திலும், அக்கறை காட்டப்படவில்லை.பல இடங்களில், சுகாதாரத் துறையினருக்கே, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெரியவில்லை. இது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அதிக பாதிப்பு உள்ள இடங்களில், வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், அறிகுறிகள் இல்லாமல், வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளோரை கண்டுபிடிக்க முடியும். இதை செய்யும்படி பரிந்துரைத்து உள்ளோம்' .இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்