Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணி: 180 பணியாளர்களுடன் மீண்டும் தொடங்கியது

ஏப்ரல் 29, 2020 11:17

திருச்சி: முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கொரோனாவால் தடைபட்ட புதிய கதவணை கட்டும் பணி 180 பணியாளர்களுடன் மீண்டும் தொடங்கியது.

திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீரை பிரித்து வழங்கக்கூடிய இடம்தான் திருச்சி முக்கொம்பு மேலணை ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படுகிற தண்ணீர் நாமக்கல் கரூர் மாவட்டங்கள் வழியாக திருச்சி முக்கொம்பு மேலணையை அடைகிறது. இந்த முக்கொம்பு மேலணைதான் காவிரி ஆற்றை இரண்டாக பிரிக்கிறது. இதில் ஒரு பகுதி தண்ணீர் பாசனத்திற்காக காவிரி ஆற்றிலும் மற்றொரு பகுதி உபரி நீராக கொள்ளிடம் ஆற்றிலும் விடப்படுகிறது. அந்த உபரி நீரை வெளியேற்றுவதற்காக கொள்ளிடம் ஆற்றில் கதவணை உள்ளது.

182 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம் கதவணையின் மூலம் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அதிகப்படியான உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 890 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேறியது. அதாவது 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந் தேதியில் இருந்து தொடர்ந்து அதிகபட்ச உபரிநீர் வெளியேறிக்கொண்டிருந்ததால் அழுத்தம் தாங்காமல் ஆகஸ்டு 22-ந் தேதி இரவு கொள்ளிடம் ஆற்றின் தெற்கு கதவணையில் உள்ள 9 மதகுகள் தொடர்ச்சியாக உடைந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

எனவே அணை உடைந்த பகுதியில் ரூ.38 கோடிக்கு தற்காலிகமாக எஞ்சியுள்ள கதவணையில் உள்ள மதகுகளை காக்கும் வகையில் ஷீட்பைலிங் மூலம் பலப்படுத்தும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்டு மாதம் முடிந்தது. தற்காலிக தடுப்பணை முடிக்கப்பட்டதன் மூலம் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பிலான காவிரி டெல்டா பாசன பகுதியின் பாசனமும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் உடைந்த மதகுகள் அருகே கீழ்புறம் ஒரு புதிய கதவணை கட்டுவதற்கு ரூ.387 கோடியே 60 லட்சத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். 

இதற்கான பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கியது. கதவணையில் தெற்கு மற்றும் வடக்கு கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே 55 புதிய மதகுகள் அமைக்கும் பணிக்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கிட்டத்தட்ட 35 சதவீத பணிகள் முடிந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. அப்பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்பி விட்டனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் இருந்து சில பணிகளுக்கு அரசு விலக்கு அளித்தது. அதில் கட்டுமான பணியும் ஒன்றாகும். மேலும் அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கொரோனாவால் தடைபட்ட கொள்ளிடம் புதிய தடுப்பணை கட்டும் பணியும் தொடங்கப்பட்டு விட்டது. வழக்கமாக தினமும் 280 பணியாளர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது 180 பணியாளர்களை கொண்டு வேலை நடந்து வருகிறது. கான்கிரீட் அமைப்பதற்காக இரும்பு கம்பிகளை முறுக்கி கட்டும் பணி மற்றும் ராட்சத தூண்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது; கதவணை கட்டும் பணியில் ஈடுபடுகிற தொழிலாளர்கள் முக கவசங்கள், கையுறைகள், தலையில் பாதுகாப்பான கவசம் அணிந்து உள்ளனர். மேலும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை மற்றும் ஆரோக்கிய நிலைமை குறித்து சோதனை செய்கிறார்கள். மேலும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரும் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ளார். கதவணை கட்டும் இடத்தில் மொத்தம் 484 ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டதில் இதுவரை 330 தூண்கள் முடிந்து விட்டன.

தற்போது 331-வது தூண் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 1650 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவரில் 715 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவருக்கான பணி முடிந்துள்ளது. 55 எண்ணிக்கையிலான மதகு கதவுகளில் 45 செய்து முடிக்கப்பட்டு விட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் இயற்கை ஏதாவது தடை செய்தால் மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்