Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரம்பலூர், அரியலூரில் முழு ஊரடங்கு

ஏப்ரல் 28, 2020 10:23

பெரம்பலூர்: பெரம்பலூர் அரியலூரில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்ததால் அரசு வெளியிட்ட தமிழக வரைபடத்தில் பெரம்பலூர் சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுவன், போலீஸ் ஏட்டு, தீயணைப்பு வீரர் கல்லூரி மாணவர், பெண் உள்பட மொத்தம் 7 பேர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதன்முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டுமே குணமடைந்துள்ளார். மீதமுள்ள 6 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதை தடுக்க கலெக்டர் சாந்தா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் பகுதிகளுக்கு 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கிலும் மருந்தகம், மருத்துவமனைகள்  பால் பண்ணை ஆகியவற்றை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலையில் குறிப்பிட்ட நேரம் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

பெரம்பலூர் தாலுகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாளையம், துறைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே தடுப்புகள் ஏற்படுத்தி தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிப்பு பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் முழு ஊரடங்கையொட்டி பெரம்பலூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை போலீசார் வழிமறித்து விசாரித்தனர்.

முழு ஊரடங்கு செய்யப்பட்ட பகுதிகளில் தேவையில்லாமல் இரு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமின்றி அவர்களை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மேலும் போலீசார்
ஹெலி கேமராவை பறக்கவிட்டு பெரம்பலூர் நகரை கண்காணித்தனர். முழு ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியதால் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் பகுதிகளில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு ஊரடங்கில் காய்கறி மார்க்கெட் உழவர் சந்தை மளிகை கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்ததால் காய்கறிகள் மட்டும் சரக்கு வேனில் ஆங்காங்கே விற்கப்பட்டது. அதனை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கி சென்றனர். உணவு பார்சலாக விற்கப்பட்டு வந்த உணவகம் நேற்றும் மூடப்பட்டதால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் கூட்டம் அலைமோதியது. ஆனால் அம்மா உணவகத்தில் போதிய உணவு இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் முழு ஊரடங்கினால் உணவு கிடைக்காமல் இருந்த ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் உணவு பொட்டலத்தை வழங்கி அவர்களின் பசி ஆற்றினர்.

அரியலூரில்...

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் தொடர்ந்து 4-வது வாரமாக அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மருத்துவமனை, பால் விற்பனை நிலையம் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உழவர் சந்தை, தற்காலிக காய்கறி விற்பனை நிலையங்கள் மளிகை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக அரியலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அரியலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன. ஊரடங்கு உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்