Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவலர், தூய்மை பணியாளர்களுக்கு தேவையறிந்து தேநீர் தரும் தன்னார்வலர்

ஏப்ரல் 27, 2020 12:25

காரைக்குடி: சீனாவில் தொடங்கிய கொரோனா தாக்கம் உலகமெங்கும் தலைவிரித்தாடுகிறது. லட்சக்கணக்கான உயிரைக் குடித்துள்ளது. தமிழகத்தில் இந்நோய் பரவாமல் இருக்க முழு  ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காலத்திலும் காவலர்கள், தூய்மை பணியாளர்கள் இடையறாது பணியாற்றி வருகின்றனர்.  இவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்டவை வழங்கினாலும் தேநீர் அருந்த கடைகள் இல்லாதது பெருங்குறையாகவே உள்ளது. இந்த  குறையை போக்க காரைக்குடி வ.உ.சி.ரோடு சோமுபிள்ளை தெருவை சேர்ந்த 60 வயதுடைய பஸ் ஸ்டாண்ட் பாலு மூலிகை டீ வழங்கி வருகிறார்.

பொது நல நோக்குடைய இவர் புயல், மழை காலங்களில் தன்னால் ஆன உதவியை செய்து வருகிறார். இந்த கொரோனா ஊரடங்கு  நேரத்தில் அன்றாடம் டீ தயாரித்து காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மனநலம் பாதித்தவர்கள், வெளியூர் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், ரோட்டோரம் வசிப்பவர்களுக்கு வழங்கி வருகிறார். எட்டு லிட்டர் பாலில், டீத்தூள், சுக்கு, இஞ்சி, மிளகு, சித்தரத்தை, அதிமதிரம், வசம்பு ஆகியவை  சேர்த்து மூலிகை டீ தயாரிக்கிறார். இந்த டீயை அருந்துவதன் மூலம் சுறுசுறுப்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது என்ற வாதத்தையும் முன்  வைக்கிறார்.

இவருடைய மனைவி சாந்தியும் இதற்கு உறுதுணையாக இருக்கிறார். காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் இவரது பயணம் மதியம் 12 மணிக்கு முடிகிறது.  நான்கு முறை வீட்டுக்குச் சென்று சுட,சுட டீ தயாரித்து வழங்கி வருகிறார். டீ வழங்குவதற்கு முன் தான் வைத்துள்ள சானிட்டரி மூலம் மற்றவர்  கைகளை சுத்தம் செய்ய சொல்கிறார். முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசமும் வழங்கி வருகிறார். மனித நேயத்துடன் தேநீர் தாகம் தீர்க்கும்  இவரின் வருகை போலீசாருக்கு சற்று ஆறுதல் தருகிறது.

தலைப்புச்செய்திகள்