Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கின்போது கிரிக்கெட் விளையாட்டு: தடுத்த போலீசாரை தாக்கிய மீனவர்கள்

ஏப்ரல் 26, 2020 12:12

நாகர்கோவில்: முள்ளூர்துறை அருகே போலீசார்- மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் 2 போலீஸ் வாகனங்களும் கல்வீசி தாக்கப்பட்டன. அந்த வாகனங்களின் கண்ணாடி நொறுங்கி விழுந்தது.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 16 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் கடற்கரை கிராமமான தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்.

இதனால் தேங்காய்பட்டினம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்றுகாலை முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து வந்தனர். அவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை கண்டித்து அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

பின்னர் மாலையில் போலீசார் ரோந்து சென்றபோதும், அந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். இதனால் மீண்டும் போலீசார் அவர்களை எச்சரித்தனர். அப்போது போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டனர். அவர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

திடீரென கூட்டத்தில் நின்ற சிலர் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, ஏட்டுகள் மணிகண்டன், அருள்டேவிட், பெண் போலீசார் மேகலா, சிந்து, ஜில்லெட் ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். மேலும் 2 போலீஸ் வாகனங்களும் கல்வீசி தாக்கப்பட்டன. அந்த வாகனங்களின் கண்ணாடி நொறுங்கி விழுந்தது.

தகவல் அறிந்து குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து காயம் அடைந்த போலீசாரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முள்ளூர்துறையைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஊரடங்கை மீறுதல், அரசு வாகனங்களை சேதப்படுத்துதல் என 11 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ஸ்டான்லி (வயது 49), வர்க்கீஸ் (50), சீஜன் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்