Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சிக்கியவர்களை அழைத்து வர வேண்டும்; முதல்வருக்கு ஜோதிமணி கடிதம்

ஏப்ரல் 25, 2020 03:24

சென்னை: தமிழகத்திலிருந்து சென்று வெளிமாநிலங்களில் சிக்கியவர்களை அழைத்து வர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கரூர் எம்.பி. ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கரூர் எம்.பி. ஜோதிமணி இன்று (ஏப்.25) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நூற்றுக்கணக்கானோர் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களுக்குத் தொழில் நிமித்தமாக சென்றவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு, தமிழக எல்லைகள் மூடல் ஆகியவற்றால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர்.

விராலிமலை தொகுதி மலைக்குடிபட்டி சாந்தி, அரவக்குறிச்சி தொகுதி தென்னிலை சந்தியா இருவரும் கர்ப்பிணிகள். இதில் கர்நாடகாவில் கணவருடன் வசிக்கும் சாந்தி நிறைமாத கர்ப்பிணி. இதனால் பிரசவத்திற்கு சாந்தி சொந்த ஊர் வர வேண்டும் என அவர் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றார்.

இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஊரடங்கால் வெளிமாநிலத்தில் சிக்கியுள்ளனர். ஊரடங்கு முடியும் வரை அவர்களை வெளிமாநிலத்தில் விட முடியாது. அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது தமிழக அரசின் பொறுப்பு மற்றும் கடமையாகும். கரூர் மக்களவை தொகுதி உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்கள் சென்று சிக்கி தவிப்பவர்களை தமிழக அரசு அந்தந்த மாநிலங்களுடன் பேசி வாகன வசதி செய்து உடனடியாக அழைத்து வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்