Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு பணி டாக்டர்களுக்கு யோகா பயிற்சி

ஏப்ரல் 23, 2020 07:20

தஞ்சை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா பயிற்சியை தஞ்சை மண்டல கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் டாக்டர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு தொடங்கியது. தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார். கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலை வகித்தார். முன்னதாக கொரோனா நோய்த்தொற்றால் சென்னையில் உயிரிழந்த டாக்டருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

யோகா பயிற்சி முகாமை தொடங்கி வைத்து கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் பேசியதாவது; கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முக கவசம், கையுறை ஆகியவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் மருத்துவப்பணியில் ஈடுபட்டாலும் கூட அதையும் தாண்டி ஏதேனும் தொற்று ஏற்பட்டு விடுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் மட்டுமே நோய்த்தொற்றை எதிர்த்து போராட முடியும்.

எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா சித்தா ஆயுர்வேதா போன்ற முறைகள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், மருத்துவபணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு அளிக்கப்பட உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தியும் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கும் நமது பாரம்பரிய முறையில் இயற்கை முறையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு முயற்சியாக குடிநீர் பானம் வழங்கப்படுகிறது. இதில் எலுமிச்சைச்சாறு, இஞ்சி, துளசி, மிளகு, தேன், பெரிய நெல்லிக்காய் போன்ற இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு வைட்டமின் சி நிறைந்த இந்த பானத்தை வழங்கிடவும் இதைத்தொடர்ந்து வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

கொரோனா சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த பானத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். இதை முதல் ஒரு வாரம் வழங்கி தற்போது உள்ள உடம்பின் எதிர்ப்பு சக்தி மற்றும் வாரத்தின் கடைசியில் உள்ள எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்து தொடர்ந்து வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம் சார்பில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பண்டங்கள் வழங்கப்பட்டது. இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதாலிங்கராஜ் மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்