Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு

மார்ச் 12, 2019 07:13

புதுடெல்லி: தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் உடனடியாக அமல் அமைச்சர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்திருவாரூரில் அதிமுக பிரமுகர் காரில் 50 லட்ச ரூபாய் பறிமுதல்: தமிழ்நாட்டில் முதல் வேட்டை கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்கள் மட்டுமே பெற்ற காங். கட்சி, இந்த தேர்தலில் எழுச்சி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ராகுல், பிரியங்கா வரவால் தொண்டர்கள் உற்சாகமடைந்த நிலையில், அக்கட்சி ெதாடர் வெற்றிகளை சந்தித்து வருகிறது. மேலும், பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறவேண்டுமெனில் மொத்த இடங்களில் 10 சதவீத வெற்றியை பெறவேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சி கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அந்தக் கட்சி 7 மாநிலங்களில் ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை.  

பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது அவர் 1984ல் படுகொலை செய்யப்பட்ட பின்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது மகனான ராஜிவ்காந்தி தலைமையிலான கூட்டணி 414 இடங்களை காங்கிரஸ் வென்றது. அப்போதும் 10 சதவீத இடங்களை எந்த கட்சியும் பெறாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை எக்கட்சியும் பெறவில்லை.  
கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், அப்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல்காந்தி அமேதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர். கடந்த 1951, 1957, 1962 ஆகிய முதல் மூன்று பொதுத்தேர்தல்களில் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது. 1951ல் 364 தொகுதிகளும், 1957ல் 371 தொகுதிகளும், 1962ல் 361 தொகுதிகளும் வெற்றிப்பெற்றது. கடந்த 1967ல் 283 தொகுதிகளும், 1971ல் 352 தொகுதிகளும் காங்கிரஸ் வென்றது.  

அதன்பின் 1977ல் மொரார்ஜிதேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 345 இடங்களை பிடித்தது. ஜனதா கட்சி மட்டும் 298 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் 189 தொகுதிகளை மட்டுமே வென்றது. கடந்த 1980ல் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 374 இடங்களை பிடித்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 351 இடங்களை கைப்பற்றியது. அதன்பின் 1984ல் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 414 இடங்களை கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் 404 இடங்களை பிடித்தது. ராஜிவ்காந்தி 31.10.1984 முதல் 2.12.1989 வரை பிரதமர் பதவி வகித்தார். அதன்பிறகு நடைபெற்ற எந்த பொதுத்தேர்தலிலும் (1989, டிச. 2 முதல் 2014, மே 15 வரை) எந்த கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணி ஆட்சியே நடந்து வந்தது. அதன்படி, 1989 முதல் 2014 வரையிலான காலத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவில் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில்,  

வி.பி. சிங் (2.12.1989 - 10.11.1990), சந்திரசேகர் (10.11.1990 - 21.6.1991), பி.வி.நரசிம்மராவ் (21.6.1991 - 16.5.1996), வாஜ்பாய் (16.5.1996-1.6.1996), எச்.டி.தேவகவுடா (1.6.1996 - 21.4.1997), ஐ.கே.குஜ்ரால் (21.4.1997-19.3.1998), வாஜ்பாய் (19.3.1998 - 13.10.1999), வாஜ்பாய் (13.10.1999 - 22.5.2004), மன்மோகன் சிங் (22.5.2004 - 22.5.2009), மன்மோகன்சிங் (22.5.2009 - மே 15, 2014 வரை) பதவி வகித்தனர்.ஆனால், 16வது மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  336 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் பாஜ மட்டும் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 272) அதிக இடங்களில் வெற்றி பெற்று (282) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து குஜராத் முதல்வராக இருந்த மோடி, பிரதமராக பதவியேற்றார்.  

தற்போது பெரும்பான்மை ஆட்சி நடத்தி முடித்த பாஜ கட்சி, தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வியூகங்களை வகுத்துவந்தாலும், அதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி அதிரடி வியூகங்களை வகுத்து பிரசார பணியில் இறங்கியுள்ளது. அந்தவகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவியை அவரது மகன் ராகுல் காந்தி ஏற்றார். இவர் பதவியேற்ற 2 மாதங்களில் தேசிய அளவிலான காரிய கமிட்டியை கலைத்தார். தொடர்ந்து, 51 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியில், 23 பேருக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய காரிய கமிட்டியை அமைத்தார். அதன்பின் நடந்த சட்டசபை மற்றும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகத்தை பெற்றது.  

இது, பாஜவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவில், பாஜ ஆண்ட சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இது, காங்கிரஸ் தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து அவருக்கு அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு, உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.  

இந்நிலையில், தற்போதைய மக்களவை தேர்தலில், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வரவு காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை கொடுத்தாலும், கடந்த 2014ல் வெறும் 44 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் தற்போது தனிப்பெரும்பான்மைக்கான பிரசார உத்திகளை அக்கட்சி வகுத்து வருகிறது. மேலும், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிகளுடன் துணையுடன் பாஜவுக்கு எதிராக ஆட்சியமைக்கவும் கடந்த சில மாதங்களாக வியூகங்களை வகுத்து, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவற்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது, எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்துவருவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்