Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினமும் 250 உதவி இயக்குனர்களுக்கு உணவளிக்கும் பெப்சி சிவா

ஏப்ரல் 22, 2020 07:04

சென்னை: கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சினிமாவில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் சுமார் 250 பேருக்கு தயாரிப்பாளர் பெப்சி சிவா நாள்தோறும் உணவளித்து வருகிறார்.

உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா. சீனாவின் வூஹானில் உருவான இந்த வைரஸ், பல்வேறு நாடுகளுக்கு பரவிவிட்டது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும்பாதிப்பை சந்தித்துள்ளன. அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இருந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளை விட நம் நாட்டில் பாதிப்பு குறைவுதான் என்றாலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது.

பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடைப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா, ‘டிவி’ படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் தங்களில் வீடுகளில் இருக்கின்றனர். தினசரி ஊதியம் வாங்கும் சினிமா தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் சிக்கிக்கொண்ட உதவி இயக்குனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இயக்குனர் கரு. பழனியப்பன் நாள்தோறும் உணவு வழக்கும் விதமாக ரூ.50 ஆயிரம் கொடுத்து தொடங்கி வைத்தார். மேலும் சில இயக்குனர்களும் உதவி செய்தனர். இப்போது தயாரிப்பாளர் பெப்சி சிவா இதை கையில் எடுத்துக்கொண்டார். நாள்தோறும் சுமார் 250 உதவி இயக்குனர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

இதுபற்றி தயாரிப்பாளர் பெப்சி சிவா தெரிவித்ததாவது:
சினிமா இப்படி ஒரு பாதிப்பை சந்திக்கும் என்று யாருக்கும் தெரியாது. நான் பெரிய தயாரிப்பாளரும் இல்லை. கஷ்டப்படும் நேரத்தில் உதவ வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நாள்தோறும் மதிய உணவு வழங்கி வருகிறேன். இதற்காக தினமும் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஞாயிறு அசைவ உணவு வழங்குகிறோம் அன்று மட்டும் ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். சங்கம் அவர்களுக்குக் கொடுக்கிற உதவி தொகை அவர்களுக்குப் போதாது. என்னால் முடிந்தளவு, சொந்த செலவில் இதை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உதவி இயக்குனர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை இயக்குனர் ராஜா கார்த்தி செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
என்னோடு அசோக், ரேணுகோபால், வேல்முருகன், ரமணி, பாக்யராஜா ஆகியோரை கொண்ட குழுவினர் இதை செய்து வருகிறோம். பிக்பஜார் எதிரில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் மதியம் உணவு வழங்குகிறோம். நெசப்பாக்கத்திலும் சிலருக்கு வழங்குகிறோம். உணவுக்கானச் செலவைத் தயாரிப்பாளர் சிவா கொடுக்கிறார். நான் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வாங்கி, உதவி இயக்குனர்கள் குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கி கொடுக்கிறேன். அவர்களின் போன் ரீ ஜார்ஜ் செய்து கொடுக்கிறேன். உதவி இயக்குனர்களிடம் ஐ.டி. கார்டு இருக்கிறதா? என்பதை எல்லாம் பார்ப்பதும் இல்லை. கேட்பதும் இல்லை. அப்படி கேட்பது அவர்கள் மனதை புண்படுத்தும் என்பதால், வருகிற அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்