Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு நிவாரணம் கிடைக்காமல் கட்டிட தொழிலாளர்கள் தவிப்பு

ஏப்ரல் 22, 2020 06:29

திருமானூர்: திருமானூர் பகுதியில் கட்டிட தொழிலாளர்கள் நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து நாள்தோறும் தினக்கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான கொரோனா
நிவாரண நிதியாக பணம் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கி வருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழிங்காநத்தம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதுபோன்ற நிவாரணநிதி வழங்கப்பட்டு வருகிறது என தெரிந்ததும் அவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு நியாய விலை அங்காடிக்கு சென்று நிவாரண நிதியை கேட்டுள்ளனர். அதற்கு கடை ஊழியர் இது அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை. அமைப்புசாரா தொழிலாளர் என பதிவு செய்து அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் யாரும் இதில் பதிவு செய்யவில்லை. ஆகையால் உங்களுக்கு இந்த நிவாரண நிதி கிடைக்காது என தெரிவித்துள்ளார். 

இதனை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் இந்த ஊராட்சியில் யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை காட்டுங்கள் என கேட்டுள்ளனர். பின் கடை ஊழியர் இதுவரை 35 பேருக்கு இந்த ஊராட்சியில் வழங்கியுள்ளோம் அவர்களின் பட்டியலை பாருங்கள் என காட்டினார். அதனை பார்த்த தொழிலாளர்கள் இதில் 3 பேர் மட்டுமே ஏழை கட்டிட தொழிலாளர்கள் மற்ற 32 பேரும் கட்டிட தொழிலாளர்களே இல்லை. அவர்கள் அனைவரும் வசதி வாய்ப்பு படைத்தவர்கள். அவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பல்வேறு துறைகளிலும் பெரிய பெரிய பதவியில் இருந்து வருகின்றனர். அவர்களை எப்படி இந்த பட்டியலில் சேர்த்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 

இதனையடுத்து தொழிலாளர்கள் அப்பகுதிக்கு உட்பட்ட டால்மியாபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிவாரண நிதி வழங்குவதை நிறுத்தி வையுங்கள் என கடை ஊழியருக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து அந்த தொழிலாளர்களிடம் கேட்டதில்; இந்த ஊராட்சியில் வழங்கப்பட்டுள்ள அந்த 32 பேரும் கட்டிட தொழிலாளர்களே இல்லை. அவர்கள் அனைவரும் வசதி வாய்ப்பு படைத்தவர்கள், பண பலத்தை வைத்து அமைப்புசாரா தொழிலாளர் என அட்டையை வாங்கி உள்ளனர். நாங்கள் தான் உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழை கட்டிட தொழிலாளர்கள் எங்களுக்கு இதுபோன்று அமைப்புசாரா தொழிலாளர்கள் என பதிவு செய்யவேண்டும் என்ற விவரமே தெரியாது. இதனை தமிழக அரசு உடனே கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நிவாரண நிதி வழங்கி உதவி செய்ய வேண்டும்.

மேலும் இதுபோன்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் பட்டியல் சேர்ப்பதற்கு அரசு அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு உறுதி செய்த பின்னரே இந்த அட்டைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்று பொய்யாக பதிவு செய்து ஏமாற்ற முடியாது எனக்கோரிக்கை வைத்தனர். மேலும் இதுதொடர்பாக புகார் மனுவையும் வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அளித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்