Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி காந்தி மார்க்கெட்டில் திடீர் தீ: 8 கடைகள் எரிந்து நாசம்

ஏப்ரல் 21, 2020 10:38

திருச்சி: கொரோனாவிற்காக மூடப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட் கடைகளில் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. 8 கடைக ள் எரிந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மாத இறுதியில் மூடப்பட்டது. காந்தி மார்க்கெட்டின் அனைத்து நுழைவு வாயில்களிலும் பூட்டு போடப்பட்டு யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் காந்தி
மார்க்கெட் வியாபாரிகள் அனைவரும் அங்குள்ள தங்களது கடைகளை மூடிவிட்டு திருச்சி பழைய பால் பண்ணை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் இரவில் மட்டும் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் காந்தி மார்க்கெட் பழமண்டி அருகில் உள்ள ஒரு கடையின் மேல் பகுதியில் போடப்பட்டு இருந்த கீற்று கொட்டகை மற்றும் வாழை சருகுகளில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பக்கத்து கடைகளின் கீற்றுகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி தலைமையில் திருச்சி தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் 8 கடைகளின் மேல் பகுதியில் போடப்பட்டு இருந்த கீற்று கொட்டகைகள் எரிந்து நாசமடைந்தன.

காந்தி மார்க்கெட் மூடப்பட்டு விட்டதால் அங்குள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டே உள்ளன. ஆள் நடமாட்டமும் இல்லை. இந்த நிலையில் அங்கு தீ பிடித்தது எப்படி என தெரியவில்லை. இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து ஏற்பட்ட கடைகளின் அருகில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. எனவே மின்கம்பிகளில் ஏற்பட்ட உராய்வினால் தீ பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் போலீசார் தீ விபத்துக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்