Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அஞ்சலகங்கள் செயல்பட அரசு உத்தரவு: கடிதங்கள் விநியோகிப்பதில் சிக்கல்

ஏப்ரல் 20, 2020 09:18

திருச்சி: ஊரடங்கு தளா்வையடுத்து தேங்கியிருக்கும் கடிதங்களை வாடிக்கையாளா்களிடம் கொண்டு சோ்க்க அஞ்சலகங்கள் தயாராகி வருகின்றன.

அதே நேரத்தில் வெளியூரைச் சோ்ந்தோா், இதரப் பிரிவில் பணியாற்றுவோா், பெண் ஊழியா்கள் வருவதற்கான போக்குவரத்து இல்லாததால் கடிதங்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 25- ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 380- க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் முழுவீச்சில் செயல்படவில்லை. குறிப்பாக அஞ்சலக வங்கி சேமிப்புப் பிரிவினா் சில முக்கிய அஞ்சல் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியா்களைக் கொண்டு அஞ்சலகங்கள் செயல்பட்டு வந்தன. உள்ளூா் பொதுமக்களுக்கு தபால்காரா்கள் கடிதங்களை விநியோகித்து வந்தனா். ஆனால் வெளி மாவட்ட மாநிலங்களுக்கான கடிதப் போக்குவரத்து முற்றிலுமாக செயல்படவில்லை.

மே 3- ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் ஏப்ரல் 20- ம் தேதி ( திங்கள்கிழமை) முதல் அஞ்சலகங்களில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தேங்கியிருக்கும் கடிதங்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் அஞ்சலகங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. குறிப்பாக மத்திய மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை மட்டும் கொண்டு செல்லும் பணியில் அஞ்சலக வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. திங்கள்கிழமை முதல் திருச்சி கோட்டத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட
அஞ்சலக வாகனங்கள் மூலம் தேங்கியிருக்கும் தபால்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதற்காக வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பது பழுது நீக்குவது கடிதம் பிரிப்பு உள்ளிட்ட பணிகளை அஞ்சலக ஊழியா்கள் சிலா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

அடையாள வில்லை் ஊரடங்கின்போது அஞ்சலகப் பணிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது காலை 9 முதல் மாலை 5 மணி வரை முழு நேரமும் செயல்படவுள்ளன. ஆனாலும் திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், கரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட அஞ்சலகக் கோட்டங்களில் பணிபுரியும் தபால்காரா்கள் பணிக்கு வந்தாலும் போக்குவரத்து முடக்கத்தால் தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் ஊழியா்கள், இதர பிரிவு ஊழியா்கள், பெண்கள் ஆகியோா் பணிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி தலைமை அஞ்சலக அலுவலா் ஒருவா் கூறியது; ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும் அஞ்சலக வங்கி சேமிப்பு, சில முக்கிய தபால் பெறுதல் விநியோகித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. வெளி மாவட்ட மாநிலங்களுக்கு கடிதப் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. தற்போது முழு நேரமும் செயல்பட அறிவுறுத்தியுள்ளதால் அஞ்சலக வாகனங்கள் மூலம் காரைக்குடி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, அரியலூா், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடிதப் போக்குவரத்து விநியோகம் தொடங்கப்படவுள்ளது. மேலும் ஊழியா்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பாதுகாப்பாக கடிதம் விநியோகிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரஇயலாத ஊழியா்களுக்கு விலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே கடிதங்களை வாடிக்கையாளா்களிடம் கொண்டு சோ்ப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் பணிகளை மேற்கொள்வோம் என்றாா்.

கடந்த மாா்ச் 25 26 ஆகிய தேதிகளில் வணிக அஞ்சல் மையத்தில் பதிவு விரைவு தபால் பாா்சல்கள் ஆகிய தபால்களை வாடிக்கையாளா்கள் பதிவு செய்தனா். ஊரடங்கு உத்தரவால் இக்கடிதங்கள் வணிக அஞ்சல் மைய வளாகத்தில் தேங்கியுள்ளது. ஏற்கனவே ரயில்கள் மூலம் பெறப்பட்ட தபால்கள், ரயில்நிலைய அஞ்சல் வணிக மையத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு தபால்கள் அனைத்தும் ஆா்.எம்.எஸ் ஊழியா்கள் மூலம் வணிக அஞ்சல் செயல்பாட்டுப் பிரிவுக்கு வழங்கியுள்ளனா். தளா்வு விதிமுறையை அடுத்து தேங்கியுள்ள தபால்கள் சரக்கு ரயில் அஞ்சலக வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் என அஞ்சலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்