Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கிகள் மூலம் ரூ.20,000 வட்டியில்லா கடன்: நாட்டுப்புறக்கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை

ஏப்ரல் 18, 2020 11:38

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில் வில்லிசை பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற வில்லிசைக் கலைஞர்கள் பூதப்பாண்டி அருகேயுள்ள கடுக்கரை முத்தாரம்மன் ஆலையத்தின் முன் வில்லிசைப் பாட்டு நிகழ்ச்சியை அரங்கேற்றினர். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கூடுதல் நிவாரண நிதி, வங்கி மூலம் வட்டியில்லாக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வில்லிசை மூலமாக வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து வில்லிசைக் கலைஞரான கே.எம்.ஐயப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கையை நாங்கள் மதிக்கிறோம். எனினும், ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறும். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவில் திருவிழாக்களுக்கென ஏற்கனவே முன்பதிவு செய்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை நம்பியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு அறிவித்த ரூ.1,000 நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், வங்கி மூலமாக வட்டியில்லா கடனாக ரூ.20,000 தந்து உதவினால் விவசாயம் அல்லது வேறு ஏதேனும் மாற்று தொழில் செய்து பிழைக்க ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்