Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொந்த ஊருக்கு சென்ற முதல்வர் பழனிசாமி: சென்னை முதல் சேலம் வரை காரில் பயணம்

ஏப்ரல் 17, 2020 01:51

சென்னை: கொரோனா பரபரப்புக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தனது சொந்த ஊரான சேலத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் இருந்தவாறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்துறை பணிகள் பற்றி நாள்தோறும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார் . இவரை பொறுத்தவரை 15 நாட்களுக்கு அல்லது  10 நாட்களுக்கு ஒரு முறை தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு விசிட் அடிப்பது வழக்கம்.

ஆனால், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய பணிகள் இருந்ததால் அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே தங்கி வந்தார். பொதுவாகவே 15 நாட்களுக்கு ஒரு முறை சேலத்துக்கு செல்லும் இவர், தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதில் கலந்துகொள்வார். உள்ளூர் கட்சிக்காரர்களுடன் ஆலோசனை நடத்துவார். நேரமிருந்தால் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று வேளாண் பணிகள் பற்றியும் கேட்டறிவார்.

இதனிடையே கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் கடந்த ஒரு மாதமாக சென்னையிலேயே அவர் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு காலம் முடிந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு காலம் நடைமுறையில் உள்ள நிலையில் வரும் 20ம் தேதி அதில் தளர்வு ஏற்படுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இதுகுறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அதற்குரிய சுற்றறிக்கை அறிவிப்பாணை உள்ளிட்டவைகள் பற்றியெல்லாம் முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல் செய்துவிட்டார் முதல்வர் பழனிசாமி.

இதனிடையே  சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் சென்ற முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதனிடையே சேலத்தில் வரும் ஞாயிறு வரை முதல்வர் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது. சொந்த ஊரில் இருந்தாலும் சுகாதாரத்துறை பணிகள் பற்றி தொடர்ந்து முதல்வர் கேட்டறிவார் என்றும் கொரோனோ நோய் தடுப்பு பணிகளில் எந்த சுணக்கமும் ஏற்படாது எனவும் முதல்வர் வட்டாரத்தில் கூறப்பட்டது.

தலைப்புச்செய்திகள்