Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூரில் கொரோனா தொற்றால் முதியவர் பலி: உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

ஏப்ரல் 17, 2020 08:53

கரூர்: கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது முதியவர் இறந்தார்.

கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இந்தநிலையில் மேலும் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதை தவிர கொரோனா பாதிப்புள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 55 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 44 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த 96 வயது முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். டெல்லிக்கு சென்று திரும்பிய அவருடைய பேரன் மூலம் முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஏற்கனவே அவர் வயது முதிர்வு காரணமாக மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே கொரோனா தொற்றால் அவருடைய உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமானதால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்தவரின் சமுதாய வழக்கப்படி உடலை அடக்கம் செய்ய கரூர் அருகே பாலம்பாள்புரத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக தகவல் பரவியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் இறந்தவரின் உடலை இங்கு கொண்டு வந்து புதைத்தால் அதன்மூலம் நோய் தொற்று பரவும். எனவே இங்கு உடலை புதைக்கக்கூடாது எனவும், வேண்டுமானால் எரித்து கொள்ளுங்கள் என கூறி சாலையில் தடுப்புகளை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நோய் தொற்று ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு முறையில்தான் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் இதற்காக 20 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்படும் என்றும் எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என்றனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

அதன்பின் இறந்த முதியவரின் உடல் உரிய பாதுகாப்புடன் பாலம்பாள்புரத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டுக்கு கொண்டுவரப்பட்டு சுகாதாரத்துறையினரின் ஆலோசனையின் பேரில் விதிமுறைகளை கடைபிடித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்தின்போது ஒருசில உறவினர்கள் மட்டுமே இருந்தனர். 

தலைப்புச்செய்திகள்