Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆனைமலை காப்பகத்தில் விஷம் வைத்து இரண்டு புலிகளை கொன்ற இருவர் கைது; இருவருக்கு வலை

ஏப்ரல் 16, 2020 04:12

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இரண்டு புலிகளை விஷம் வைத்து கொன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியான சேத்துமடை அருகே, பத்து வயதான ஆண் புலி மற்றும் பெண் புலி இறந்து கிடந்ததை, 8ம் தேதி வனத்துறையினர் கண்டறிந்தனர். மேலும், புலியின் சடலத்துக்கு அருகே, காட்டுப்பன்றியின் சடலத்தை கண்டறிந்தனர்.

புலிகள் இறந்த காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனை செய்ததில், விஷம் வைத்து கொல்லப்பட்ட காட்டுப்பன்றியை சாப்பிட்டு, புலிகள் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் புலிகளை கொன்றவர்களை பிடிக்க விசாரணை நடத்தினர். இந்நிலையில், புலியை கொன்ற வழக்கில் தொடர்புடைய, சேத்துமடையை சேர்ந்த கருப்பசாமி, 36, ராசு, 56 ஆகியோரை இன்று, 16ம் தேதி மாலை கைது செய்தனர்.

வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறியதாவது:கைது செய்யப்பட்ட இருவரும் தங்கள் நண்பர்களான சேத்துமடையை சேர்ந்த வெள்ளிங்கிரி, 34, தம்மம்பதியை சேர்ந்த முருகன், 32, ஆகியோருடன் இணைந்து, வனவிலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்தனர். சேத்துமடை அருகே காட்டுப்பன்றி, புலிகள் நடமாட்டம் இருப்பதை கண்டறிந்த இவர்கள், காட்டுப்பன்றியை பிடிக்க, பொறி வைத்தனர். இதில், காட்டுப்பன்றி சிக்கி இறந்தது.

இறந்த காட்டுப்பன்றியின் உடலை வைத்து புலியை பிடித்து, அதன் பாகங்களை எடுத்து விற்பனை செய்ய திட்டமிட்ட இவர்கள், புலிகள் நடமாட்டம் உள்ள ஓடைப்பகுதியில், காட்டுப்பன்றியின் உடலை வைத்தனர். பின், அதன் உடலில் துளையிட்டு, தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றினர். வாசனையால் கவரப்பட்டு வந்த இரண்டு புலிகள், காட்டுப்பன்றியின் இறைச்சியை சாப்பிட்டு பரிதாபமாக இறந்தது. வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகிறோம்.இவ்வாறு, தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்