Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூரில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்ற 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ஏப்ரல் 16, 2020 08:46

கரூர்: கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது பூரண குணமடைந்துள்ள நிலையில் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் குளித்தலை கல்லூரி விரிவுரையாளர் உள்பட 25 பேருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் இவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 12 பெண்கள் உள்பட 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதற்கிடையே முதலில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 9 பேர் பூரண குணம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் ஆலோசனையின் பேரில் அவர்கள் தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கலெக்டர் அன்பழகன் கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா ஆகியோர் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மேலும் 9 பேர் தற்போது பூரண குணமடைந்துள்ளனர். இவர்களும் முதலில் பாதிக்கப்பட்ட 25 பேரில் தொடர் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. குணமடைந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இதுவரை மொத்தம் 40 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதில் 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 22 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் அதிகம் பாதிப்புக்குள்ளான பள்ளப்பட்டி பகுதியில் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலை தடுக்க மருத்துவதுறையினர் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். 

இதுகுறித்து கரூர் மருத்துவக்கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா கூறுகையில்; மேலும் சிலர் வேகமாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். இதுவரை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 பேருக்கு கொரோனா ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 1000 பேருக்கு பரிசோதனை செய்யும் அளவிலான மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன. இதையடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை தொடர்ச்சியாகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்படும் என்றார்.


 

தலைப்புச்செய்திகள்