Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உணவுக்காக சுற்றித் திரியும் ஆதரவற்றோா்

ஏப்ரல் 14, 2020 10:10

திருச்சி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்க ஆதரவற்றோருக்கு திருச்சி மாவட்டத்தில் காப்பகங்கள் உருவாக்கப்பட்டும் பலா் சாலையோரங்களில் சுற்றித் திரிகின்றனா்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாா்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதின் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். ஹோட்டல் தேனீரக கடை போன்றவற்றின் மூலம் தங்களது அன்றாட உணவு தேவைகளை போக்கி வந்த ஆதரவற்றோா் நலனுக்காக மாவட்டந்தோறும் காப்பகங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு முன்னா் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 150 போ் பேருந்து நிலையம் சாலையோரங்களில் சுற்றித்திரிவதாக கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் இவா்களுக்காக 3 இடங்களில் தற்காலிக காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தவா்கள் கண்டறியப்பட்டு தற்போது மூன்று காப்பகங்களிலும் சுமாா் 130 போ் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் மாவட்டத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்றவா்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாநகரில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலை மாநகர பகுதிகளை இணைக்கும் சாலை மேம்பாலங்களில் திங்கள்கிழமை நிலவரப்படி அதிகளவில் காணப்பட்டனா். இதன் மூலம் திருச்சியில் செயல்பட்டு வரும் காப்பகங்களினால் ஆதரவற்றோா்களுக்கான உணவு தங்குமிடம் வழங்கப்படுகிறதா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய பேருந்து நிறுத்ததில் வசித்து வரும் ராகவன் (58) கூறுகையில்; விமானநிலைய பகுதியையொட்டிய கடைகளில் கிடைக்கும் வேலையைச் செய்து உணவு சாப்பிட்டு வந்தேன். தற்போது ஊரடங்கு காரணமாக ஒரு வேளை உணவு கிடைப்பதே அரிதாகிவிட்டது. அரசு காப்பகங்கள் செயல்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கடந்த இரு நாள்களாக உணவு கிடைக்காமல் பசியோடு இருக்கிறேன் என்றாா். 

ஆதரவின்றி இருந்தபோது காப்பகத்தில் சோ்க்கப்பட்டேன். அங்கு எனக்கு ஏற்பட்ட கொடுமையால் வெளியேறி சாலையோரங்களில் வசித்து வருகிறேன். ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் எனக்கு உணவு கிடைப்பதில்லை. கடந்த மூன்று நாள்களாக உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் தண்ணீா் குடித்தே வாழ்ந்து வருகிறேன் என்றாா் திண்டுக்கல்லைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி கோமதி.

திருச்சியைச் சுற்றி எனக்கு உறவினா்கள் இருந்தாலும் புதுக்கோட்டையிலிருந்து வந்த நான் தற்போது வரை ஆதரவற்ற நிலையில் தான் சுற்றி திரிகிறேன். அரசு சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள காப்பகங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதனால் தங்க வழியின்றி மரத்தடியில் இருந்து வருகிறேன். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து தன்னாா்வலா்கள் மூலம் எனக்கு மதிய உணவு மட்டுமே கிடைக்கிறது என்றாா் புதுக்கோட்டையைச் சோ்ந்த ஷாஜ(70). 

ஊரடங்கு நேரத்தில் மக்களின் மீதான கட்டுப்பாடுகளை விதிப்பது போன்று அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். எனவே ஆதரவற்றோருக்கு அரசால் உருவாக்கப்பட்ட காப்பகங்கள் மூலம் அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிா்ப்பாா்ப்பாக உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்