Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினக்கூலி தொழிலாளர்களுக்கு கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதியுதவி

ஏப்ரல் 14, 2020 07:11

புதுடெல்லி : கூகுள் நிறுவனத்தின் தலைவர், சுந்தர் பிச்சை, கொரோனாவால் பாதிக்கப் பட்ட தினக் கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு உதவும், 'கிவ் இந்தியா' என்ற தொண்டு நிறுவனத்திற்கு, 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உள்ளார்.

கூகுள் நிறுவனம், ஏற்கனவே, கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, 6,000 கோடி ரூபாய் நிதிஉதவி வழங்கியுள்ளது. அதில், சிறு தொழில்களுக்கு உதவுவதற்காக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம், 1,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கிவ் இந்தியா நிறுவனம், சுந்தர் பிச்சைக்கு அனுப்பியுள்ள, 'டுவிட்டர்' செய்தியில், 'தினக் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவ, 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தமைக்கு நன்றி' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்திற்கு உதவ, 'பி.எம்.,-கேர்ஸ்' என்ற குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிதியத்திற்கு, 'என்.எஸ்.இ.,' எனப்படும் தேசிய பங்குச் சந்தை, 26 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது தவிர, இந்நிறுவன ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை தனியே வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே இந்நிதியத்திற்கு, டாடா குழுமம், 1,500 கோடி, விப்ரோ நிறுவனம் மற்றும் அசீம் பிரேம்ஜி அறக்கட்டளை, 1,125 கோடி, முகேஷ் அம்பானி, 500 கோடி ரூபாய் மற்றும் ஏராளமான நிறுவனங்கள் நிதி வழங்கியுள்ளன. பேடிஎம் நிறுவனம், ராணுவ வீரர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு, 10 லட்சம் துாய்மை பொருட்களையும், 4 லட்சம் முக கவசங்களையும் வழங்கியுள்ளது.

தலைப்புச்செய்திகள்