Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக உயர்வு ; 11 பேர் பலி

ஏப்ரல் 13, 2020 02:18

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,13) மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது வீட்டு கண்காணிப்பில் 33,850 பேர், அரசு கண்காணிப்பில் 136 பேர் உள்ளனர். 28 நாள் தனிமை காலம் முடிந்தவர்கள் 63,380 பேர். இதுவரை 12,746 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,173 ஆனது. தமிழகத்தில் மொத்தம் 25 அரசாங்க சோதனை மையம், 9 தனியார் மையத்தில் உள்ளது.

தமிழகத்தில் 10 வயதுக்கு கீழ் உள்ள 31 பேருக்கு இதுவரை கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. பலி 11 என்ற நிலையிலேயே உள்ளது. மொத்தம் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 58 ஆக உள்ளது. உயிரிழப்பை குறைப்பதே எங்களின் நோக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் முதன்முறையாக 146 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தினை கொள்முதல் செய்துள்ளோம். அதுவும் தொற்று ஏற்படும் முன்னரே கொள்முதல் செய்யப்பட்டது. சீனாவின் வூஹானில் இருந்து பரவத்தொடங்கிய உடனே ஒன்றரை கோடி மூன்றடுக்கு மாஸ்க்குகள் ஆர்டர் செய்துள்ளோம். தற்போது எங்களிடம் 65 லட்சம் மூன்றடுக்கு மாஸ்க்குகள், 3 லட்சம் ‛என்-95' மாஸ்க்குகள் இருப்பில் உள்ளன.

அனைத்து நாடுகளிலும் நடந்தவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிலிருந்து பலவற்றை தெரிந்து கொண்டு முன்னரே அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். மருத்துவ உபகரணங்கள் பல ஆர்டர் செய்துள்ளோம். ரேபிட் பரிசோதனை கிட், 4 லட்சம் அளவிற்கு ஆர்டர் செய்துள்ளோம். ஓரிரு நாளில் வந்துவிடும். அதனை எதிர்பார்க்காமல் உறுதி செய்யப்படும் சோதனையை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்