Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டினருக்கு நூதன தண்டனை அளித்த போலீசார்

ஏப்ரல் 13, 2020 12:33

ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் நடமாடிய வெளிநாட்டினருக்கு உத்தர்காண்ட் போலீசார் நூதன தண்டனை கொடுத்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் உத்தர்காண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த 1,500 பேர் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். கடந்த 15 நாட்களில் 700 பேர் சிறப்பு விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் உத்தர்காண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள பிரபல சுற்றுலா தலமான தபோவன் கங்கை ஆற்றங்கரையில் இஸ்ரேல், ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 10 வெளிநாட்டினர், ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி நடமாடி உள்ளனர். போலீசார் ரோந்தின் போது சிக்கிய அனைவருக்கும், 'நான் ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்கவில்லை. என்னை மன்னிக்கவும் ' என 500 முறை பேப்பரில் எழுதி கொடுக்குமாறு நூதன தண்டனை கொடுத்துள்ளனர்.

தபோவன் போலீஸ் செக்போஸ்ட் பொறுப்பாளர் வினோத்குமார் கூறுகையில், சில வெளிநாட்டினர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் நடமாடுவதாக தகவல் வந்தது. இதனையடுத்து சக போலீசாருடன் ரோந்து சென்ற போது, 10 வெளிநாட்டினர் சுற்றி திரிந்தனர். உரிய காரணம் இன்றி வெளியில் நடமாடியவர்களிடம் போலீசார் கேள்வி எழுப்பியதற்கு, காலை 7 மணி முதல் பிற்பகல் 1மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக எண்ணியதாக கூறினர். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர, வெளியில் சுற்றி திரிவதற்கு என விளக்கி கூறினேன்.

செக்போஸ்டில் இருந்து 50 -60 பக்கம் கொண்ட நோட்டை எடுத்து வர சொன்னேன். ஒவ்வொருவருக்கும் தலா 5 பக்கங்கள் கொடுத்து, 'நான் ஊரடங்கை பின்பற்றவில்லை. என்னை மன்னிக்கவும்' என 500 முறை எழுதுமாறு தண்டனை அளித்தேன். பின்னர் மறுபடியும் இதுபோன்று ஊரடங்கை மீறி வெளியே நடமாடினால், மீண்டும் இந்தியாவுக்கு வர முடியாதபடி கருப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்படுமென அனைவரையும் எச்சரித்து அனுப்பினேன். வெளிநாட்டினரும் இனி வெளியில் நடமாட மாட்டோமென உறுதியளித்து சென்றனர்'. இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்