Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்நடைகளுக்கு உணவாக சாலைகளில் கொட்டப்படும் தக்காளி: விவசாயிகள் வேதனை

ஏப்ரல் 10, 2020 10:39

திருச்சி: மாடுகளுக்கு தக்காளி உணவாகவும், குரங்குகளுக்கு வெள்ளரிக்காய்களை உணவாகவும் சாலைகளில் கொட்டப்படும் நிலையால் வாழவழியின்றி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா பகுதி மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். இந்நிலையில் சமீபத்தில் பெரும் சவாலாக அமைந்துள்ள கொரோனாவால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக
ஈடுபட்டு வருகிறது. இதுமட்டுமின்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் அவற்றை வீணாக கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கும் பரிதாப நிலையால் வேதனையின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். தக்காளியை சாலையோரத்தில் மாடுகளுக்கு உணவாக கொட்டி விடுகின்றனர். இதே போல் ஏற்றுமதி ரக வெள்ளரிக்காயை பொறுத்தவரை கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு தான் அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் தற்போது நீடித்து வரும் தடையால் வெள்ளரிக்காய்களை கொண்டு செல்ல முடியாத நிலையில் அவற்றை சாலையோரங்களில் குரங்கிற்கு உணவாக வழங்கும் நிலை தொடர்கதை தான். இது ஒருபுறம் இருக்க வையம்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் பாகற்காய் கொடியிலேயே பறிக்காமல் பழுக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இன்னும் சில தினங்களில் அழுகும் நிலையும் ஏற்படும்.

கடும் சிரமத்திற்கு பின்னர் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளின் நிலையும் இப்படி இருக்க என்னசெய்வதென்று தெரியாமல் வாழவழியின்றி வாங்கிய கடனுக்கு விடைதெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்