Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கையும் மீறி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியின் இறுதி சடங்கில் பங்கேற்ற காஷ்மீரிகள்

ஏப்ரல் 09, 2020 07:28

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, முக்கிய தளபதியான சஜத் நவாப் தர், புதன்கிழமை நடந்த பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில், சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது இறுதிச் சடங்கில், கொரோனா ஊரடங்கையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் காஷ்மீர் மக்கள் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு, பாதுகாப்புப் படையினருக்கு, வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சோபூரின், அரம்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதைப் பற்றிய தகவல்கள் கிடைத்தது. உடனடியாக அப்பகுதியைச் சுற்றி வளைத்து, இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவனான சஜத் நவாப் தர் புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் காஷ்மீரை சேர்ந்தவன்.

மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பிரேத பரிசோதனைகளுக்கு பிறகு, அவனது உறவினர்களிடம் 'இறுதிச் சடங்கின் போது சமூக விலகல் கடைபிடிக்கப்படும்' என்று எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கப்பட்ட பின், அவனது உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் அவனது இறுதிச் சடங்கில் திரண்டனர். சமூக விலகலையும் யாரும் கடைப்பிடிக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காஷ்மீரில் இதுவரை கொரோனா தொற்றால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 33 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தான், ஒரு பயங்கரவாதியின் இறுதிச் சடங்கிற்காக இவ்வளவு பேர் கூடியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்