Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா மாவட்டங்கள் சுற்றி வளைத்து சீல்

ஏப்ரல் 06, 2020 02:12

புதுடெல்லி: கொரோனா வைரஸ் 3-ஆவது நிலையை அடைவதை தடுக்க அந்த நோய் பாதித்த மாவட்டங்களை சுற்றி வளைத்து சீல் வைக்கும் விதமாக மத்திய அரசு கட்டுப்பாட்டு திட்டங்களை அமல்படுத்த அதிரடி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் 690 பேரும், தமிழகத்தில் 571 பேரும், கேரளாவில் 314 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 227 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் இதுவரை 274 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. மார்ச் 22ம் தேதியிலிருந்து இந்த எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதால் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 20 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இதில் நோய் பரவலை கடுமையாக கட்டுப்படுத்துவது குறித்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

அதில், கொரோனா பாதித்த பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டுவது. இந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவுள்ளது. கொரோனா தொற்று உறுதியானவர்கள், நோய் தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்.

கொரோனா வைரஸ் சோதனையில் இரு முறை நெகட்டிவ் என வந்தால் மட்டுமே நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்படுவர். கொரோனா அறிகுறிகள் கொஞ்சமாக இருப்போர் ஸ்டேடியங்களில் தனிமைப்படுத்தப்படுவர். மிதமான அறிகுறிகள் உள்ளவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர். நோய் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களை மூடுவது போன்ற நடவடிக்கைகளும் 20 பக்க ஆவணங்களில் உள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவில் அடுத்து வரும் சில நாட்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் யாரும் வீட்டை விட்டு வராமல் கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா காணொலி மூலம் தொடர்பு கொண்டு அனைத்து மாநில அரசுகளும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்கான திட்டங்களை உடனடியாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். கொரோனா சோதனைகளுக்கு பிறகு குறைந்தது 4 வாரங்களுக்கு கொரோனாவின் புதிய பாதிப்புகள் இல்லாவிட்டால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்