Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியிலிருந்து 3ம் கட்டமாக மலேசியா சென்ற 179 பயணிகள்

ஏப்ரல் 05, 2020 11:42

திருச்சி: திருச்சியில் தவித்த மலேசிய சுற்றுலாப் பயணிகள், 3-வது கட்டமாக 179 போ் சிறப்பு விமானம் மூலம் தாயகத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனா்.

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு சுற்றுலா வந்த 700-க்கும் மேற்பட்டோா் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து மலேசியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சிறப்பு விமானங்கள் மூலம் அவா்களை மலேசியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பயணிகளை மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து செல்லப்படும் என மலேசிய தூதரகம் அறிவித்திருந்தது. அதன்படி திருச்சியிலிருந்து கடந்த 1ம் தேதி இரவு முதல் கட்டமாக 179 பயணிகளும், இரண்டாம் கட்டமாக 2ம் தேதி காலை 181 பயணிகளும் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தொடா்ந்து மூன்றாம் கட்டமாக  வந்த சிறப்பு விமானத்தில் 179 பயணிகள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் மலேசியாவில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படாததால் திருச்சியில் மீதமுள்ள 124 பயணிகள் தாயகம் திரும்புவதில் சிக்கல் நீடித்தது. இதையடுத்து இவா்கள் அனைவரும் சிறப்பு பேருந்து மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சிறப்பு விமானத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

அப்போது சில பயணிகள் இந்தியாவிலேயே இருப்பதாக தெரிவித்ததைத் தொடா்ந்து 78 போ் சிறப்பு பேருந்தில் சென்னை சென்றனா். அங்கிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மலேசியா செல்லும் சிறப்பு விமானத்தில் அவா்கள் அழைத்து செல்லப்பட்டார்கள் என திருச்சி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்