Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீலா ராஜேஷுக்கு ‘செய்வன திருந்த செய்’ என்பதே தாரக மந்திரம்: தாயார் பெருமிதம்

ஏப்ரல் 05, 2020 09:49

சென்னை: “தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு, ‘செய்வன திருந்த செய்’ என்பதே தாரக மந்திரம்,” என்று அவரது தாயாரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராணி வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கொரோனா விவகாரத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக  மிக நன்றாக செயல்படுகிறார், பீலாவை பொறுத்தவரை எந்த ஒரு காரியத்தையும் கடமைக்கு செய்ய மாட்டார். செய்வன திருந்தச் செய் என்பதற்கேற்ப எந்த ஒரு பணியாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு செலுத்தி உண்மையாக உழைப்பார். ஏனோதானோ என எந்த விவகாரத்திலும் அவர் இருந்ததில்லை. உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் பீலாவை பாராட்டுவதை நினைத்து ஒரு தாயாக பெருமைப்படுகிறேன். 

பீலா அறிவுக்கூர்மையானவர், பள்ளி பருவம் முதலே வகுப்பில் முதல் ரேங்க் எடுக்கும் மாணவி என் மகள். எப்போதும் படிப்பு, படிப்பு என்று தான் இருப்பார். சென்னையில் பள்ளிப்படிப்பை தொடங்கிய அவர் பின்னர் உயர்வகுப்புகளுக்காக ஏற்காட்டில் உள்ள உறைவிட பள்ளி ஒன்றில் சேர்த்தோம். படிப்பிலும், மதிப்பெண்கள் எடுப்பதிலும் நம்பர் 1 என்பதால் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தது. 

மருத்துவம் படித்த பீலாவை ராஜேஷ் ஐ.பி.எஸ்.க்கு திருமணம் செய்து கொடுத்தோம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்பது பீலாவின் விருப்பமாக இருந்தது. திருமணத்திற்கு பின்னர் இதற்கு அவரது கணவர் ராஜேஷ் எந்த தடையும் விதிக்கவில்லை. இதையடுத்து அதற்கான பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டு தாம் விரும்பியது போலவே ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

நேரம் காலம் பார்த்து எந்த பணியிலும் ஈடுபட மாட்டார். இப்போது கூட தினமும் அவர் உறங்குவதற்கு நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஆகிறது. மீண்டும் அதிகாலையில் எழுந்து இக்கட்டான இந்த பேரிடர் கால பணிகளை கவனிக்கத் தொடங்கி விடுகிறார். பீலாவுக்கும் சரி, எங்கள் குடும்பதினர் அனைவருக்கும் சரி கடவுள் பக்தி அதிகமுண்டு. சுவாரஸ்யமான தகவல் என்றால் என் மகளுக்கு நடனத்திலும், விளையாட்டிலும் அதிக ஆர்வம் உண்டு. டென்னிஸ், துரோபால் போன்ற விளையாட்டுகளில் முன்பு ஈடுபடுவார். இப்போது தான் அதற்கு நேரமே இல்லையே.

அரசியலை பற்றி எதுவும் பேசமாட்டோம். நான் பரம்பரை, பரம்பரையாக அரசியல் செய்து வரும் அரசியல்வாதி குடும்பத்தை சேர்ந்தவள் இல்லை. காமராஜர் மீது இருந்த பற்று, அவர் ஆற்றிய தொண்டு காரணமாக அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினேன். அதேபோல் அரசியலுக்கும் வந்து காங்கிரஸ் சார்பில் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தேன். ஆனால், எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நான் அரசியலுக்கு சென்றதில் உடன்பாடில்லை. எனது பிள்ளைகள் பீலா உட்பட மூன்று பேரும் கூட அரசியல் வேண்டாம் என்றுதான் கூறினார்கள். ஆனால், காமராஜரை போல் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்றும் அவரது எளிமையையும் எனது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்துள்ளேன்.

பொன்.ராதாகிருஷ்ணன் நெருங்கிய உறவினர் கிடையாது. எனக்கு பூர்வீகம் நாகர்கோவில். எனது கணவரான முன்னாள் டி.ஜி.பி. வெங்கடேசனுக்கு சொந்த ஊர் நாசரேத். நாங்கள் எல்லோரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வளவு தான். சிலர் விசாரிக்காமல் எதை வேண்டுமானாலும் இப்போது போடுகிறார்கள். அதைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
இவ்வாறு ராணி வெங்கடேசன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்