Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஏப்ரல் 03, 2020 09:24

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 183 டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் ஒரு சில கடைகளின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 46 கடைகளிலிருந்த மதுபாட்டில்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு திருவெறும்பூர் டாஸ்மாக் நிறுவனத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு 16 கடைகளிலிருந்த மதுபாட்டில்களை மட்டுமே வைக்க முடிந்தது.

இந்நிலையில் மீதமுள்ள 30 கடைகளிலிருந்த மதுபாட்டில்களை திருமண மண்டபங்களில் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக திருச்சி மேலரண்சாலையில் உள்ள தேவர்ஹால் திருமண மண்டபத்தில் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டது.

இங்கு வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது மதுபாட்டில்கள் வைக்கப்பட்ட அறை திருமண மண்டபத்தின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் விடியோ பதிவு செய்து பாதுகாக்கப்படுகிறது. 

இதுமட்டுமல்லாது அந்தந்த டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மதுபாட்டில்களை அப்புறப்படுத்தும் பணிகளுக்கான ஏற்று இறக்கு கூலிகளை அரசு ஏற்கவில்லையென புகார் எழுந்துள்ளது.

அப்புறப்படுத்தும் கடை ஊழியர்களே மதுபாட்டில்களை கடைகளிலிருந்து ஏற்றி பின்னர் திருமண மண்டபத்துக்கு கொண்டு வந்து இறக்கும் வரையில் ஆகும் செலவை ஏற்று வருகின்றனராம். அரசு நிறுவனத்தின் உடைமையை அரசே செலவிட்டு பாதுகாக்காமல் தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது என்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

தலைப்புச்செய்திகள்