Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியலூரில் கொரோனா வார்டிலிருந்த பெண் ‘டிக்டாக்’: ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்

மார்ச் 31, 2020 07:12

அரியலூர்: கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரி பெட்டில் படுத்துக்கொண்டே டிக்டாக் வீடியோக்களை இளம்பெண் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோக்களை செல்போனில் வாங்கி ஆர்வமுடன் பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் 3 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.

அரியலூரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கடுமையான காய்ச்சல், சளி அறிகுறியால் கடந்த 20ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக டெஸ்ட் செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனால் அப்பெண்ணை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணித்தபடியே இருந்தனர். இந்த பெண்ணுக்கு தொற்று என்பதால் இவரது உறவினர்கள் 16 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டனர். அதனால் கொரோனா பாதித்த இளம்பெண் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணோ, சும்மா இல்லாமல் செல்போனில் டிக்டாக் செய்து வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸ்களிடம் ஓடி, ஓடி சென்று காட்டிக் கொண்டிருந்தார். இவர்களை தவிர, ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடமும் அந்த வீடியோவை செல்போனில் காட்டி உள்ளார். இப்படி 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் மருத்துவத்துறை அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்தனர். அதுமட்டுமல்ல, கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் அந்த 3 பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி உள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் அதை பற்றின சோக கீதத்தைதான் டிக்டாக் வீடியோவாக அந்த பெண் பதிவிட்டிருந்தார். “கொரோனா வைரஸ் வந்துச்சு நம்ம கிட்டதான். அது வந்துச்சுன்னா நம்ம எல்லாம் மட்டைதான்”, “கதறவிட்டாங்கோ, பதறவிட்டாங்கோ, பரவ விட்டாங்கோ. வைரஸை பரப்பி விட்டாங்கோ..” “இப்படியே வாழ்ந்தாக்கா புழு மட்டும் வாழும்டா, பூச்சி மட்டும் வாழும்டா.. மனுஷ பய இடம் மட்டும் மண்ணாகி போகும்டா” என்று பெட்டில் படுத்துக்கொண்டே அடுத்தடுத்த சோகமான டிக்டாக் வீடியோக்களை செய்துள்ளார் இந்த பெண்.

இவை அனைத்தும் செல்போனில் இருந்து டெலிட் செய்யப்பட்டது. ஆஸ்பத்திரிக்குள்ளேயே இளம்பெண் டிக்டாக் வீடியோ செய்ததும், அந்த பெண்ணை தனிமைப்படுத்தி கண்காணிக்க நியமிக்கப்பட்ட பணியாளர்களே இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் அரியலுார் அரசு மருத்துவமனை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்