Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவையும் துரத்தும் கொரோனாவால் 6 பேர்  பாதிப்பு 

மார்ச் 03, 2020 08:13

டெல்லி: உலகின் பல்வேறு நாடுகளை பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஈரான், சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்களுடன் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தற்போது மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம் 25ம் தேதி இத்தாலியில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்த ஒருவர் டெல்லிக்கு திரும்பினார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல கடந்த மாதம் 20ம் தேதி ஈரானில் இருந்து பெங்களூர் திரும்பிய 24 வயதுடைய மென்பொருள் பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ளது. இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு புனேவில் வைத்து மீண்டும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. 

இதனிடையே, விமான நிலையங்களில் அமைந்துள்ள வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான பதிவு அலுவலகங்களுக்கு உளவுத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில். சீனா, தென் கொரியா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கட்டாய உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது தொலைபேசி எண் மற்றும் முகவரியை கட்டாயம் பெறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34-இல் இருந்து ஒரே நாளில் 52ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 1500 பேர் உள்பட ஐரோப்பாவில் 1,835 பேருக்கு கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இத்தாலியில்தான் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவை விட மற்ற நாடுகளில்தான் கொரோனா வைரஸ் 9 மடங்கு வேகமாக பரவியுள்ளது.

தலைப்புச்செய்திகள்