Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொதுமக்களில் ஒருவனாக சென்று கவர்னரை சந்தித்த :புதுச்சேரி அமைச்சர்

மார்ச் 03, 2020 08:10

புதுச்சேரி: கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நேற்று மக்களோடு மக்களாக சென்று கவர்னரை சந்தித்தார். புதுச்சேரி சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தனது தொகுதியான ஏனாமில், திட்டங்களை செயல்படுத்த விடாமல் கவர்னர் தடுப்பதாகவும், கோப்புகள் கவர்னர் மாளிகையில் தேங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

கவர்னர் கிரண்பேடி ஆய்வுக்கு ஏனாம் சென்றபோது கருப்பு பலுான்களை பறக்கவிட்டு மல்லாடி எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரண்பேடி மீது வழக்குத் தொடுப்பேன் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், ஏனாம் பிராந்திய பிரச்னைகள் குறித்து பேச கவர்னர் நேரம் ஒதுக்கி தராததால், ராஜ்நிவாசில் பொதுமக்களை சந்தித்து குறைகேட்கும் நேரத்தில் நானும் பொதுமக்களின் ஒருவனாக சென்று கவர்னரை சந்திப்பேன் என, மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியிருந்தார்.

அதன்படி நேற்று மாலை மக்களோடு மக்களாக சென்று கவர்னரை சந்தித்து பேசிவிட்டு வந்தார். அப்போது அவர் தன்னை அமைச்சர் என குறிப்பிடாமல், பெயரையும் ஊரையும் மட்டும் எழுதி கொடுத்து கவர்னரை சந்தித்தார். கவர்னரை சந்தித்துவிட்ட வந்த மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், சுற்றுலாத்துறை உள்ளிட்ட எனது துறை சார்ந்த 11 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. இது தொடர்பாக ஆதாரங்களுடன் அவரிடம் கேள்வி எழுப்பினேன். எந்த பதிலும் அவர் தரவில்லை.அவர் தொடர்ந்து கோப்புகளை காலம் தாழ்த்துவதால் தொகுதியில் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

தனிப்பட்ட முறையில் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் அவர் செயல்பாடு உள்ளது. எனவே, டில்லி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.

தலைப்புச்செய்திகள்