Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொது மேடையில் கோழிக்கறி சாப்பிட்ட தெலுங்கானா மந்திரிகள்

பிப்ரவரி 29, 2020 07:18

ஐதராபாத்: கோழிக்கறியால் கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெலுங்கானா மந்திரிகள் கோழிக்கறியை சாப்பிட்டனர்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் கோழிக்கறிகள் மூலமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக, ஏராளமான மக்கள் கோழிக்கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். இதனால், இந்தியாவில் கோழிக்கறி விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. 

இதனையடுத்து கோழிக்கறியில் கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதேபோல் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான அச்சத்தை போக்கும் வகையிலும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தெலுங்கானா மாநிலத்தில் மந்திரிகள் பொது மேடையில் கோழிக்கறியை சாப்பிட்டனர். 

ஐதராபாத்தின் டாங்க் பந்த் பகுதியில் பிராய்லர் கோழி விற்பனை நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மந்திரிகள் கே.டி.ராமா ராவ், எடிலா ராஜேந்தர், தலசானி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்