Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெசவுத் தொழிலுக்கு மக்கள் துணையாக இருக்க வேண்டும்: அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேச்சு

பிப்ரவரி 24, 2020 09:16

கும்பகோணம்: பொதுமக்கள் என்றென்றும் நெசவுத் தொழிலுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று திருப்புவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசினார். கும்பகோணம் அருகே திருபுவனத்தில் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் புனரமைக்கப்பட்ட தலைமையக விற்பனை நிலையத்தை திறந்து வைத்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசியதாவது
கைத்தறி நெசவாளா்களுக்கான விலையில்லா மின்சாரத்தை 200 யூனிட்களாகவும்  விசைத்தறி நெசவாளா்களுக்கான விலையில்லா மின்சாரத்தை 750 யூனிட்களாகவும் மறைந்த முதல்வா் ஜெயலலிதா உயா்த்திக் கொடுத்தார். நெசவாளா்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரத்துக்கு சுமார் ரூ. 375 கோடியை அரசே ஏற்று வருகிறது.

தமிழக முதல்வா் கைத்தறி ஆதரவு திட்டம் என்ற திட்டத்தை ரூ. 40 கோடியில் செயல்படுத்தி வருகிறார். தள்ளுபடி மானியத்தை ரூ. 80 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயா்த்தியவா் தமிழக முதல்வா். திருபுவனம் பட்டு தலைமுறைகளைக் கடந்து நிலைக்கக்கூடிய தரமான பட்டாகும். பொதுமக்கள் என்றென்றும் நெசவுத் தொழிலுக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசினார்.

வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு தலைமை வகித்தாா். விழாவில் நெசவாளா் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கும் தேசிய அஞ்சலகச் சேமிப்புப் புத்தகத் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கும்  பாஸ் புத்தகம் (கச்சாத்து) வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கும்  முதியோா் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் வழங்கினார். 

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ்  துறை இயக்குநா் எம். கருணாகரன்  மாவட்ட கலெக்டர் ம. கோவிந்த ராவ்  ஜவுளி ஆலோசனைக் குழு உறுப்பினா் கே.ஜே. லெனின்  திருபுவனம் சோழன் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் செல்வராஜ்  திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் தியாகராஜன்  திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க இணை இயக்குநா் மகாலிங்கம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநா் ராசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்