Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவை அலைய விட்ட விஜயகாந்த் தேமுதிகவை அலற வைத்த திமுக

மார்ச் 07, 2019 07:48

சென்னை: பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திய செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.  
சூரியன் படத்தில் அரசியல்வாதியாக வரும் கவுண்டமணி, “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்பார். இணைப்பு துண்டிக்கப்பட்ட தொலைபேசியில் நீண்ட நேரமாக பேசுவது போல் பாவ்லா காட்டும் அவர், அது தெரிய வந்து அசிங்கப்பட்டதும் பேசும் வசனமே இது. 

தமிழக அரசியல் களத்தில் இப்போது அரங்கேறும் காட்சிகளை பார்க்கும் போது கவுண்டமணி பேசிய அந்த வசனமே நினைவுக்கு வருகிறது. சினிமாவில் கொடிகட்டி பறந்த விஜயகாந்த் 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கினார். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழக அரசியலில் கால்பதிக்கும் எண்ணத்தில் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைத்தார். 

அவரது எண்ணப்படியே தே.மு.தி.க. 8-ல் இருந்து 10 சதவீத வாக்குகளை அள்ளியது. பா.ம.க. செல்வாக்குடன் விளங்கிய விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்துக்குள் புகுந்தார். 

இதன் பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைக்காமல் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. அப்போது மேடைகளில் முழங்கிய விஜயகாந்த், “மக்களோடும், தெய்வத்தோடும் மட்டுமே நான் கூட்டணி அமைப்பேன்” என்று முழங்கினார். 

1996-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற கணிசமான வாக்குகளே தி.மு.க.வை காலி செய்தது. இதனால் 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்தோடு ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதும் ஜெயலலிதா முதல்-அமைச்சராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தனர். 

ஆனால் இந்த கூட்டணி நீடிக்கவில்லை. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே அ.தி.மு.க.வுடனான நட்பை விஜயகாந்த் முறித்துக் கொண்டார். அவரது நடவடிக்கைகளை விமர்சித்து சட்டசபையிலேயே ஜெயலலிதா காட்டமாக பேசினார். 

அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்காவிட்டால் தே.மு.தி.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காது. இப்போது அந்த கட்சி தலைவரின் செயல்பாடுகளை பார்க்கும் போது, உண்மையிலேயே தே.மு.தி.க.வோடு கூட்டணி அமைத்ததற்காக தான் மிகவும் வேதனைபடுகிறேன் என்று குறிப்பிட்டார். இதன் பிறகு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். 

இதன் பின்னணியில் அ.தி.மு.க. இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் இனி... அ.தி.மு.க.வோடு தே.மு.தி.க. கூட்டணி அமைக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது. 

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் உறுதியுடன் இருந்தார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமானது. தி.மு.க. அணியில் விஜயகாந்த் சேர்ந்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 

இதனை மனதில் வைத்தே கருணாநிதி அளித்த பேட்டியில், “பழம் நழுவி பாலில் விழும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் சேரவில்லை. 

முதல்-அமைச்சர் கனவுடன் மக்கள் நலக்கூட்டணியில் போய் விஜயகாந்த் சேர்ந்தார். இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் விஜயகாந்தை மேடையில் ஏற்றி கிரீடம் சூட்டி அழகு பார்த்தன. “அடுத்த முதல்வர் விஜயகாந்த்” என்கிற முழக்கத்தை கூட்டணி கட்சிகள் முன் வைத்தன. ஆனால் அது எல்லாம் வெற்றுக் கோ‌ஷமாகிப் போனது. மக்கள் நலக் கூட்டணி வீழ்ச்சியை சந்தித்தது. 

இப்படி தமிழக அரசியல் களத்தில் கடந்த காலங்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சி தலைவர்களின் நம்பிக்கையை பெறாதவராகவே விஜயகாந்த் இருந்துள்ளார்.  

இதற்கு வட்டியும், முதலுமாக சேர்த்து இப்போது அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தே.மு.தி.க.வை பழிவாங்கி விட்டதோ என்கிற எண்ணமே இப்போது நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது தோன்றுகிறது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அப்போது வீசிய மோடி அலையிலும் ஜெயலலிதாவே 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார். 2 தொகுதிகளில் மட்டுமே (பொன்.ராதாகிருஷ்ணன், அன்புமணி) பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. 

இதன்பிறகு பா.ஜனதா கட்சியுடன் நெருக்கம் காட்டாமல் தே.மு.தி.க. விலகியே இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பியதும் அவரை மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனை தொடர்ந்து பா.ஜனதா மேலிட தலைவரான பியூஸ் கோயல் விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது முடிவுக்கு வரவில்லை. பா.ம.க.வுடன் முன்கூட்டியே கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து அக்கட்சிக்கு 7 தொகுதிகளையும், ஒரு மேல்சபை உறுப்பினர் பதவியையும் வழங்கியதை விஜயகாந்த் விரும்பவில்லை. 

இருப்பினும் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை வழங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துவருகிறார். இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாகவே அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேருவாரா என்கிற குழப்பம் நீடித்து வந்தது. 

இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்களுடன் மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் சந்தித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதே நேரத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை அவரது வீட்டில் தே.மு.தி.க. நிர்வாகிகள் சிலரும் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். 

ரகசியமாக நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை வெளியில் கசிந்து வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இதனால் ஒரே நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பேச்சு நடத்திய ஒரே கட்சி என்கிற அவப்பெயர் தே.மு.தி.க.வுக்கு நேற்று ஏற்பட்டது. 

இதுபற்றி சுதீசிடம் கேள்வி எழுப்பியபோது, திணறலாகவே பதில் அளித்தார். பா.ம.க., அ.தி.மு.க. அணியில் சேர்ந்ததும் தி.மு.க.வுடன் பேச்சு நடத்தியது உண்மைதான் என்று அவர் கூறினார். 

தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பற்றி துரைமுருகன் அளித்த பேட்டி நேற்று பரபரப்பாகவும், அதே நேரத்தில் கலகலப்பாகவும் அரசியல் களத்தில் பேசப்பட்டது. 
துரைமுருகன் கூறும்போது, “தே.மு.தி.க. கூட்டணிக்காக எங்களை தேடி வந்தது. இப்போது எங்கள் தலைவர் ஊரிலும் இல்லை. அவர்களுக்கு கொடுப்பதற்கு எங்களிடம் சீட்டும் இல்லை” என்று அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக தெரிவித்தார். அவரது இந்த பேட்டி வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த்துடன் தி.மு.க., கூட்டணிக்கு முயற்சித்தது போல இப்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஆனால் தே.மு.தி.க. ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக்கு வராமல் எல்லாம் முடிந்த பின்னர் கூட்டணிக்கு வருவதாக தி.மு.க.வை தேடிச்சென்று கூறி அவமானப்பட்டுள்ளது. தி.மு.க.வும் அதனை பயன்படுத்தி தே.மு.தி.க.வை அலற வைத்துள்ளது. 

அதே நேரத்தில் எப்படியாவது தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. பாஜக அறிவுறுத்தலின்பேரில், அதிமுக தலைவர்கள் விஜயகாந்த்தை பலமுறை சந்தித்து பேசி உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் மட்டும் 10-க்கும் மேற்பட்ட முறை ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கூட்டணிக்காக அ.தி.மு.க.வை விஜயகாந்த் அலைய விட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

ஒரே நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தே.மு.தி.க.வின் செயல் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி உள்ளது. 

இது தொடர்பான கேலியும், கிண்டல்களும் அதிகமாக பரவி வருகிறது. தே.மு.தி.க.வின் இந்த இரட்டை நிலைப்பாட்டால் கட்சியின் செல்வாக்கு மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்களும் கணித்துள்ளனர். 

தே.மு.தி.க.வின் கூட்டணி தாமதத்துக்கு தொகுதி எண்ணிக்கை மட்டுமே பிரச்சனையா? இல்லை வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றிய விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. எல்லாம் தே.மு.தி.க.வுக்கே வெளிச்சம்.  
 

தலைப்புச்செய்திகள்