Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடிக்கடி பஸ் பழுது மாற்று பஸ் செல்ல காசு இல்லாமல் பயணிகள் தவிப்பு

பிப்ரவரி 13, 2020 10:17

திருச்சி: அடிக்கடி பஸ் பழுதாவதால் மாற்று பஸ் செல்ல காசு இல்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். இதனால் திருப்பைஞ்சீலிக்கு புதிய பஸ் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்., திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருப்பைஞ்சீலிக்கு தினமும் அரசு பஸ் ஒன்று வந்து செல்கின்றது. 

இந்த பஸ்சில் திருப்பைஞ்சீலியிலிருந்து திருச்சிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்று ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். இந்த பஸ் திருப்பைஞ்சீலியிலிருந்து மண்ணச்சநல்லூர், நொச்சியம், டோல்கேட் ,திருவானைக்கோவில், சத்திரம் பஸ் நிலையம், மார்க்கெட், பாலக்கரை வழியாக மத்திய பஸ் நிலையம் வரை செல்கிறது.

இந்தநிலையில் இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுகிறது. இதன் காரணமாக தாங்கள் பயணம் செய்யும் பஸ் எங்கு பழுதாகி நின்று விடுமோ என்ற அச்சத்திலேயே தினமும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். வழக்கம்போல் திருப்பைஞ்சீலியிலிருந்து திருச்சிக்கு இந்த பஸ் புறப்பட்டது. உத்தமர்கோவில் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் டயரிலிருந்து ஒரு விதமான துர்நாற்றத்துடன் புகை வந்தது.

இதை கவனித்த டிரைவர் பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தினார். உடனே பஸ் பழுதாகி விட்டதாக கூறி  டிரைவரும்  கண்டக்டரும் பயணிகளை நடுவழியில் கீழே இறக்கிவிட்டனர். பின்னர் அந்த வழியாக வந்த அரசு பஸ்களில் மாணவ-மாணவிகள் மற்றும் சிலர் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பலர் அலுவலகத்துக்கு நேரமானதால்  தனியார் பஸ்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்ய குறிப்பிட்ட அளவே பணம் கொண்டு வந்தவர்கள் அடுத்த பஸ்சில் செல்ல டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதால் நீண்ட நேரம் காத்திருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபோன்று அடிக்கடி பழுதடையும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இந்த வழித்தடத்தில் விட வேண்டும் அதுவரை பழைய பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்