Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போராட்டம் நடத்த உரிமை உண்டு, மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம்

பிப்ரவரி 10, 2020 01:02

புதுடெல்லி: குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் நடத்தப்படும் போராட்டம் தெடார்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டம் நடத்த உரிமை உள்ள அதேசமயம் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் கவுல் மற்றும் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஒரு சட்டம் குறித்து மக்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் அனைத்து உரிமையும் உள்ளது. இந்த சட்டம் பற்றிய வழக்கு ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் மக்கள் போராட்டம் தொடர்கிறது.

போராட்டம் நடத்த உரிமை உள்ள அதேசமயம் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது. சாலைகளை மறிக்கக் கூடாது. இதுபோன்ற பகுதியில் நீண்டகாலமாக போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நீங்கள் தொடர்ந்து போராட விரும்பினால் அதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

எனினும் இந்த வழக்கில் எதிர்தரப்பின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசும், சம்பந்தப்பட்டவர்களும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.  இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்