Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் பாதிப்பு: கோவை, திருப்பூரில் 100 பேர் தீவிர கண்காணிப்பு

பிப்ரவரி 08, 2020 07:48

கோவை: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புக்கு 724 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் அவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த சில வாரங்களாக சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து கோவைக்கு 74 பேர் வந்துள்ளனர். அவர்களில் 30 பேர் கோவை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அவர்கள் சீனா மற்றும் சீனா வழியாக வந்தவர்கள் என மாநகராட்சி சுகாதாரத்துறையால் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவர்கள் 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் தினசரி நேரில் சென்று அவர்களை கண்காணித்து வருகின்றனர். அவர்களை பொது இடத்தில் நடமாட வேண்டாம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திருப்பூரில் 32 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இவர்களையும் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் திருப்பூர் மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க 10 படுக்கை வசதியுடன் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்