Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குளியல் அறையில் சிக்கிய பெண்: காவலன் செயலி மூலம் மீட்ட போலீசார்

பிப்ரவரி 08, 2020 06:59

சென்னை: நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் குளியல் அறையில் சிக்கிக்கொண்ட பெண்ணை காவலன் செயலி மூலம் போலீசார் மீட்டனர்.

நுங்கம்பாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூஞ்சோலை, முதல்நிலை காவலர் சங்கர் ஆகியோர் சம்பவத்தன்று மதியம் 12.30 மணிக்கு ரோந்து வாகனத்தில் சென்று  கொண்டிருந்தனர். அப்போது, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரோந்து வாகனத்துக்கு ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலன் செயலி மூலம் ஒரு பெண் உதவி  கேட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஓட்டலில் இருந்து இந்த தகவல் வந்து இருக்கிறது. உடனே அங்கு சென்று உதவுங்கள் என்று கட்டுப்பாட்டு  அறையில் இருந்து கூறப்பட்டது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் பூஞ்சோலை, உதவி கேட்ட பெண்ணின் போன் நம்பரில் அவரை தொடர்பு கொண்டார். ‘நாங்கள் போலீஸ் உங்களுக்கு தேவையான  உதவியை உடனே செய்ய தயாராக இருக்கிறோம். கவலைப்பட வேண்டாம்’ என்று கூறினார்.

இதையடுத்து, காவலன் செயலி மூலம் உதவி கேட்ட பெண்ணின் பெயர் மல்லிகா (35) என்றும், அவர் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள ஓட்டல் குளியல் அறைக்கு சென்றபோது கதவை திறக்க முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற போலீசார், ஓட்டல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். பின்னர், மல்லிகா சிக்கிக்கொண்ட குளியல் அறையின் கதவை உடைத்து  அவரை மீட்டனர்.

தகவல் கிடைத்த 15 நிமிடங்களுக்குள் பெண்ணை மீட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூஞ்சோலை, உடன் சென்ற முதல் நிலை காவலர் சங்கர் ஆகியோரை,  சென்னை போலீஸ் கமி‌ஷனர் விசுவநாதன் அழைத்து பாராட்டினார். 
 

தலைப்புச்செய்திகள்