Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது அநீதி: ராமதாஸ்

பிப்ரவரி 07, 2020 11:35

சென்னை: தமிழகத்தின் 10 புதிய ரயில் பாதைக திட்டங்களுக்கு போதிய அளவு நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழக வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில், அடையாள நிதி ஒதுக்கீட்டைத் தவிர, வேறு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட ரயில் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம் - கடலூர், அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழநி, தருமபுரி - மொரப்பூர், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, மதுரை-அருப்புகோட்டை- தூத்துக்குடி, சத்தியமங்கலம்- பெங்களூரு, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ஆகிய 10 திட்டங்கள்தான் கடந்த 12 ஆண்டுகளில் தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை திட்டங்கள் ஆகும். இவற்றில் முதல் 6 திட்டங்கள் பாமகவைச் சேர்ந்த அரங்க.வேலு மத்திய ரயில்வே துறை இணையமைச்சராகப் பணியாற்றியபோது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.

ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி பாதை திட்டம் அரங்க.வேலு காலத்தில் உருவாக்கப்பட்டு, பின்னர் 2013-14 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது ஆகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை அறிவிக்கப்பட்ட இத்திட்டங்களில் ஒன்றுக்குக் கூட பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மாறாக, இத்திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக அடையாள நிதியாக தலா ரூ.1,000 மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு ரயில்வே துறை ஆளுகைக்குள் உள்ள பகுதிகளில் ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 2020-21 ஆம் ஆண்டில் நிதியாகவும், கடன் பத்திரங்களாகவும் மொத்தம் ரூ.4,057 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட, ஒரு மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள 10 புதிய பாதை திட்டங்களில் ஒன்றுக்குக் கூட நிதி ஒதுக்காதது மிகப்பெரிய அநீதி ஆகும். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவை ரயில் பாதைகள்தான். 
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கு விழுப்புரம், திருச்சி வழியாக ஒரு பாதை, கடலூர், தஞ்சாவூர் திருச்சியை இணைக்கும் வகையில் ஒரு கிளைப்பாதை ஆகியவை உள்ளன. இவற்றில் முதல் பாதையில் சென்னையிலிருந்து மதுரை வரை இரட்டைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான 10 புதிய ரயில் பாதை திட்டங்களுமே தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, சரக்குப் போக்குவரத்து வளர்ச்சி என அனைத்து நிலை வளர்ச்சியையும் ஊக்குவிக்கக் கூடியவை. அவ்வாறு இருக்கும்போது அத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.
இதற்கெல்லாம் மேலாக இவற்றில் முதல் 5 திட்டங்களைக் கைவிடுவதென கடந்த ஆண்டு ரயில்வே வாரியம் தீர்மானித்தது. அத்திட்டங்களை ரத்து செய்ய கூடாது என பாமக வலியுறுத்திய பிறகுதான், அம்முடிவை ரயில்வே வாரியம் மாற்றிக் கொண்டது. 

அத்தகைய சூழலில் அத்திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதியை ஒதுக்கினால்தான் அத்திட்டங்களால் பயனடையக் கூடிய மக்கள் திருப்தியடைவார்கள். ஆனால், அவ்வாறு செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக புதிய ரயில் பாதைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. அதனால், ரயில் பாதை வளர்ச்சியில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழகத்தின் 10 புதிய ரயில் பாதைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றும் வகையில், அவற்றுக்குப் போதிய அளவு நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்