Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் விவேகானந்தருக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

பிப்ரவரி 04, 2020 09:23

தஞ்சாவூர்: விவேகானந்தர் விஜயத்தை நினைவு கூறும் விதமாக கும்பகோணத்தில் அவரது கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் மணிமண்டபம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் இணை செயலாளர்  ஸ்ரீமத் ருத்ரானந்த மகராஜ் பேசினார். கும்பகோணத்தில் விவேகானந்தர் விஜய விழாவில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் விவேகானந்தர் வேடமணிந்து பங்கேற்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

வீரத்துறவி விவேகானந்தர் சிக்காகோவில் வரலாற்று உரை நிகழ்த்திய பிறகு 1897-ல் ஜனவரி 26ல் தாயகம் திரும்பினார். பாம்பனில் வந்து இறங்கிய சுவாமிகள் பிப்ரவரி 3ம் தேதி  கும்பகோணத்திற்கு வருகை தந்து 3 நாட்கள் வேதாந்த பணி குறித்து வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார்.
அதனை நினைவு கூறும் விதமாக சோழமண்டலம் விவேகானந்தா சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் விவேகானந்தர் விஜய விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

கும்பகோணம் ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விவேகானந்தர் விஜய விழாவிற்கு அம்மன்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சேவா ஆசிரமம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் தலைமை வகித்தார். கும்பகோணம் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ட்ரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் தமிழ்நாடு பாவ பிரசார பரிஷத் கன்வீனர் பாண்டுரங்கன்இ இணை கன்வீனர்கள் பிரபாகர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி முதல்வர் கவுரி வரவேற்றார்.

விவேகானந்தர் விஜய விழா ஓவியப் போட்டியில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ மாணவியர் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் இணை செயலாளர்  ஸ்ரீமத் சுவாமி ருத்ரானந்த மகராஜ் பரிசுகள் வழங்கி பேசுகையில் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை உள்வாங்கி இளைஞர்கள் மாணவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர வேண்டும். நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.  எழுமின்   விழிமின் என்ற கருத்தை சுவாமி விவேகானந்தர் முதலில் கூறிய பெருமைக்குரியது கும்பகோணம்.

தேச பக்தி  தெய்வபக்தி  குருபக்தி மூன்றும் அவசியம் என்பதை விவேகானந்தர் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் தேசபக்தி உள்ளவர்களாக உருவாக்க வேண்டும். அதனை நாம் முதலில் செய்தால் அனைத்தும் தானாக வந்தமையும். 
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தல்  சிறந்த நூல்களை படித்தல்  நல்லோருடன் பழகுதல்  சேவைப் பணிகளில் தொடர்ந்து தன்மை ஈடுபடுத்தி கொள்ளுதல் போன்ற செயல்களில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு பெற்றோர்களும்  ஆசிரியர்களும் துணை நிற்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் இரண்டு முறை கும்பகோணத்திற்கு விஜயம் செய்து பெருமை சேர்த்துள்ளார்.

எனவே அவரது வருகையை போற்றும் விதமாகவும்  இளைஞர்களுக்கும்   மாணவர்களுக்கும் வழிகாட்டும் விதமாக அவரது வரலாற்று பேச்சுக்களை உள்ளடக்கிய மணிமண்டபத்தை  கும்பகோணத்தில்  அமைக்க மத்திய  மாநில அரசுகள் முன்வர வேண்டும். இதற்கு உள்ளூர் பக்தர்களும் துணைநின்று பணியாற்ற வேண்டும் என சுவாமிகள் பேசினார்.

விவேகானந்தர் வேடம் அணிந்த வந்த  150க்கும் மேற்பட்ட மழலையர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி தமிழ்நாடு பாவ பிரசார பரிஷத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சத்ய ஞானானந்த மகராஜ் ஆசி வழங்கினார். பொருளாளர் பாரதிமோகன்  சத்யநாராயணன்  பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சோழமண்டல ஸ்ரீ விவேகானந்தர் சேவா சங்க தலைவர் பாஸ்கர் நன்றி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்