Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

பிப்ரவரி 03, 2020 10:35

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேளூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் சாலையோரேத்தில் நெல்லை மலை மலையாக கொட்டி வைத்து பரிதவித்து வருகின்றனர். தங்களுக்கு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கும்பகோணம் அருகே முள்ளுக்குடி, கூத்தனூர், சூரியமூலை, பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய திருப்பனந்தாள் ஊராட்சியில் சுமார் ஆயிரத்து 300 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிரிட்டு தற்போது அறுவடையும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 23 வேளூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டை நெல் சாலையோரத்தில் கொட்டி வைத்து விவசாயிகள் கடந்த 20 நாட்களாக காத்துக் கிடந்து பரிதவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு 17 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது பெய்த பருவ மழையால் கூடுதலாக சுமார் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள் ஆனால் அதனை கொள்முதல் செய்ய தங்கள் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் மழை பெய்தால் சாலையோரம் கொட்டி வைத்துள்ள நெல் மணிகள் முளைத்து வீணாகி மிகுந்த நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகும் என்று கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், கடன் வாங்கி பயிர் செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரம் வீணாவதைக் கண்டு மனம் பதறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் ஆதிமூலம், ராஜு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தங்கள் பகுதியில் நெரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளதாகவும், அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டு மட்டுமே செல்வதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு அதிகாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதியில் அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதால் தான் தாங்கள் அப்பகுதியில் நெல்லை கொட்டி வைத்துள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

தங்கள் பகுதியான 23 வேளூர் பகுதியில் நேரடிநெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை வைத்து சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டதாக தமிழக அரசும் அமைச்சர்களும் தெரிவித்தாலும், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய போதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்