Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக கூட்டணி- தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கியதாக தகவல்

மார்ச் 06, 2019 07:48

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 2 தனித்தொகுதிகள் உள்பட 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 15 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. விட்டுக் கொடுத்துள்ளது. இன்னும் 25 தொகுதிகள் மட்டுமே மிச்சமிருக்கிறது. ஆனால் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே இருந்தது. பாமகவுக்கு கொடுக்கப்பட்டதுபோல், 7 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்கும்படி தேமுதிக கூறியது. இதனை அதிமுக ஏற்கவில்லை. இதனால் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது. 

விஜயகாந்தின் மனதை மாற்றி எப்படியாவது கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டினர். நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே, பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வரும்போது, தேமுதிக கூட்டணிக்கு வருவது உறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

இதனை உறுதி செய்யும் வகையில் மத்திய மந்திரி பியுஷ் கோயலின் பதிலும் அமைந்தது. ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.  தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்து, கூட்டணி தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.  

இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 2 தனித் தொகுதிகள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தனித் தொகுதிகளை ஏற்க தேமுதிக தயங்குவதே இழுபறிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்