Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் சேவை துவக்கம்

ஜனவரி 16, 2020 11:03

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினம் தோறும் 1 லட்சம் வரையிலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக எழும்பூர், நேரு பூங்கா, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர் உள்ளிட்ட 23 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தகம் செயல்பட்டு வருகின்றது. இதில் 17 நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி உள்ளது. 

இந்தநிலையில், முக்கிய நிலையமான சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்ட்ரல் நிலையத்தின் பூமிக்கடியில் கார் மற்றும் பைக் பார்க்கிங் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இந்த பணி முழுமையாக முடிவடைந்ததையடுத்து நேற்று முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 100 கார்களையும், 180 முதல் 200 வரையிலான பைக்குகளையும்  நிறுத்தலாம். இதேபோல், வாகன நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பயணிகள் எளிதாக நிலையத்திற்கு செல்லும் வகையில் மின்தூக்கி, 2 சாய்தள பாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.10ம், நான்கு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை மூலம் மட்டுமே பார்க்கிங் கட்டணத்தை செலுத்த முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்