Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜாமியா மிலியா பல்கலைக்கழக தாக்குதல்: டெல்லி போலீஸ் மீது வழக்கு தொடர முடிவு

ஜனவரி 13, 2020 12:56

புதுடெல்லி: டெல்லி போலீஸ் அத்துமீறி பல்கலை கழகத்திற்குள் நுழைந்ததாக ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்தா அக்தர் குற்றம் சாட்டியுள்ளார். ஜாமியா மிலியா பல்கலை கழக மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலை கழகத்தில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி போலீஸ் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பல்கலை கழக துணைவேந்தர் நஜ்தா அக்தர், விடுதியை எந்த மாணவரும் காலி செய்ய வேண்டியதில்லை என்றும், பல்கலைகழக வளாகத்தில் பாதுகாப்பை இரட்டிப்பாக்கி உள்ளதாக துணை வேந்தர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஜாமியா மிலியா பல்கலை கழகத்தில் பொருட்களை சேதப்படுத்திய டெல்லி போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த டிசம்பர் 13ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

அப்போது வன்முறை வெடித்தது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டதோடு, இரண்டு பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும், இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.  அப்போது, போராட்டக்கார்களுடன் சேர்ந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களையும் போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வகுப்பறைகளை போலீசார் சேதப்படுத்திவிட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்