Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிப்ரவரி 1-இல் மத்திய பட்ஜெட்

ஜனவரி 05, 2020 05:43

புதுடெல்லி: வரும் 2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். எனினும் முழு அளவிலான பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்வது இதுவே முதன்முறையாகும்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைச் குழு அடுத்த வாரம் கூடுகிறது.
 
இவ்வாண்டின் முதல் அமர்வு என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதன்படி வரும் 29-ஆம் தேதி அல்லது 30 -ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கான கூட்டுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 31-ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. பிப். 1-ஆம் தேதி 2020-21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.பட்ஜெட் பிப். 1- ஆம் தேதிதான் தாக்கல் செய்யப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மோடி ஆட்சியில் வார இறுதி நாளான சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, இது இரண்டாவது முறையாகும். கடந்த 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சனிக்கிழமையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், அந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி நோய்வாய்ப்பட்டிருந்ததால், அப்பொறுப்பை வகித்த பியூஷ் கோயல் 3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
 
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அமைந்த பின்னர், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். அவர் மீதமுள்ள மாதங்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு முதன் முறையாக நிர்மலா சீதாராமன் முழு நிதியாண்டுக்கான (2020-21) பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன் மூலம் ஏராளமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. தன்னுடைய முதல் பட்ஜெட்டைப் பற்றி அவர் குறிப்பிடுகையில் நாட்டின் வளர்ச்சிக்கான இணக்கத்துடனும் எதிர்கால நோக்குடனும் தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னர் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பல்வேறு சீர்திருத்தங்களையும் ரிசர்வ் வங்கி ஆலோசனையுடன் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டார்.
 
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள நிலையில், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தடுக்கும் விதமாக முதலீடுகளை அதிகரிக்க சுமார் ரூ.1.45 லட்சம் கோடி வரிச் சலுகைகளை வழங்கினார். பெரு நிறுவன வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, வங்கி வட்டி விகித குறைப்பு, வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கான உதவிகள் ஆகியவை மூலம் பொது மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகரிக்கும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். ஆனாலும் இவை அனைத்தும் வரி சேமிப்பாக திசை திரும்பியதே தவிர சந்தையை வலுப்படுத்தவும் முதலீடுகள் அதிகரித்து வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் பெருமளவில் உதவிசெய்யவில்லை.
 
மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எதிர்பார்த்த அளவு வராததால் கடந்த பட்ஜெட்டில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட சில அறிவிப்புகளையும் அவர் வாபஸ் பெற்றார். பொதுத் துறை நிறுவனங்களில் அரசு பங்குகளை விலக்கிக்கொள்வதன் மூலம் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே அரசுக்கு கிடைத்தது. மறைமுக வரியிலும் பற்றாக்குறை நிலவுகிறது.
 
பல்வேறு வரிச்சலுகைகளினால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வாரா, தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கவும் தனி நபர்களுக்கான வருமான வரிச் சலுகைகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான வரிச்சலுகைகளை மீண்டும் அறிவிப்பாரா என்ற கேள்விகள் பொருளாதார நோக்கர்களால் எழுப்பப்பட்டு வருகின்றன.

தலைப்புச்செய்திகள்