Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை: அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஜனவரி 05, 2020 05:27

புதுடெல்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து அசாமில் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். அவர்களைக் கண்டறிய அந்த மாநிலத்தில் கடந்த ஆகஸ்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது.

இதில் 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றன. அவர்கள் இந்திய குடிமக்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். பதிவேட்டில் சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. அவர்கள் தங்களது இந்திய குடியுரிமையை நிரூபிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமையை நிரூபிக்க தவறினால் அவர்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததால் அசாம் தவிர வேறு எங்கும் அந்த திட்டம் அமல் செய்யப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணி நடைபெறும். இதற்கு எவ்வித ஆவணங்களையும் அளிக்க தேவையில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.8,754 கோடியும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941 கோடியும் ஒதுக்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதன்படி வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மக்கள்தொகை பதிவேடு புதுப்பிப்பு பணியும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளன.

எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மேற்குவங்கம், கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள், தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டப் பணியை மேற்கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளன. தேசிய குடி மக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக செயல்படுத்துகிறது என்று அந்த மாநில முதல்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, "மக்கள்தொகை சட்டம் மற்றும் குடிமக்கள் சட்டம் 2003-ன் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, மக்கள்தொகை பதிவேடு புதுப்பிப்பு பணிகளை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மேற்கொள்வது கட்டாயமாகும். இந்த பணிகளை மேற்கொள்ள மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்றும் தெரிவித்து உள்ளன.

தலைப்புச்செய்திகள்