Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டாசு தொழிலாளி குரூப் 1 தேர்வில் சாதனை

ஜனவரி 02, 2020 01:18

சிவகங்கை: குரூப் 1 தேர்வில் சிவகங்கையை சேர்ந்த மாணவி அர்ச்சனா மாநில அளவில் முதலிடம் பிடித்தார். பட்டாசு தொழிலாளி மகாலட்சுமி, 4ம் பிடித்து சாதனை படைத்தார்.

தமிழக அரசு துறையில், துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட எட்டு வகை பதவிகளில், 181 காலியிடங்களை நிரப்ப, 2019 மார்ச்சில் முதல் நிலை தேர்வு நடந்தது. 2.29 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில், 9,442 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, பிரதான தேர்வு நடத்தப்பட்டு, 363 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, டிச., 23 முதல், 31 வரை நேர்முக தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் 850 க்கு 569 மதிப்பெண் எடுத்து சிவகங்கையை சேர்ந்த அர்ச்சனா 30, முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சிவகங்கை செந்தமிழ் நகரைச் சேர்ந்த இவரது தந்தை வணிகவரித்துறை ஓய்வு அலுவலர் உதயகுமார். தாய் ரேணுகாதேவி. அர்ச்சனா கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் இன்ஜி., கல்லுாரியில் பி.இ., முடித்தேன். 2010ல் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சென்னை இன்போசிஸ்-ல் சேர்ந்தேன். எனது கணவர் கணேஷ். பெங்களூருவில் பணிபுரிகிறார். ஏழு ஆண்டு பணிபுரிந்த நான், ராஜினாமா செய்துவிட்டு, கடந்த ஒன்றரை ஆண்டாக குரூப் 1 தேர்விற்காக படித்து, தேர்வு எழுதினேன். தினமும் 10 மணி நேரம் படிப்பேன். தேர்வை சந்தித்த முதல் முயற்சியிலேயே மாநில அளவில் முதலிடம் கிடைத்தது மகிழ்ச்சி. துணை கலெக்டர் பதவியை பெற விரும்புகிறேன், என்றார்.

மாணவி யுரேகா, இரண்டாமிடமும், தற்போது, டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் தனலட்சுமி, மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். 4 வது இடத்தை விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த மகாலட்சுமி 26 பெற்றுள்ளார். இவரது தந்தை கருப்பசாமி, தாய் ராஜேஸ்வரி. இருவரும் பட்டாசு தொழிலாளிகள்.

மகாலட்சுமி கூறுகையில், ''எனது பெற்றோர் 40 ஆண்டுகளாக பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நானும் பட்டாசு தொழிலாளியாக பணியாற்றினேன். அரசு பணியில் சேர்வதை லட்சியமாக கொண்டு வேலை செய்து கொண்டே படித்தேன். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி மாநில அளவில் 4 ம் பிடித்து வெற்றி பெற்றுள்ளேன். ,' என்றார்.

மாநில அளவில் முதல் எட்டு இடங்களையும், மாணவியரே பெற்றுள்ளனர். மாநில தேர்தல் அதிகாரி பழனிசாமியின் மகன் மித்ரன், 53வது இடத்தை பெற்றுள்ளார்.

தலைப்புச்செய்திகள்